திண்டுக்கல், மார்ச்.20
கடலூரில் பாதாள சாக்கடையில் இறங்கி பணியாற்றிய 3 துப்புரத் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியானார்கள். இந்த தொழிலாளர்களை சட்டவிரோதமாக பணியில் ஈடுபடுத்திய நகராட்சி ஆணையர், நகர்நல அதிகாரி, ஒப்பந்ததாரர் உள்ளிட்ட அதிகாரிகளை கைது செய்யவேண்டும் என்று சிஐடியு கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
கடலூரில் உள்ள முதுநகர் சாலையில் திங்களன்று காலை பாதாள சாக்கடை அடைப்பை சுத்தம்செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 3 துப்புரவு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். கொடிக்கால் குப்பம் பகுதியைச் சேர்ந்த அப்புக்குட்டி என்ற ஜெயக்குமார், வேலு, சோரியம்குப்பம் முருகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். துப்புரவு தொழிலாளர்கள் பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யக்கூடாது என்றும், இயந்திரங்களை வைத்து மட்டுமே சுத்தம் செய்யும் பணியை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஒப்பந்த தாரர்கள் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. தமிழக அரசுக்கும் இச்சட்டத்தை அமலாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்கவேண்டும், மேலும் கையால் மலம் அள்ள விதிக்கப்பட்ட தடைச்சட்டத்தின்படி வழக்குபதிய வேண்டும் என்றும் இயந்திரங்களை மட்டுமே இப்பணியை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளிலும் மற்றும் 125 நகராட்சிகளில் பெரும்பாலானவற்றில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாதாள சாக்கடை பராமரிப்பு பணி ஒப்பந்த முறையில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஒப்பந்ததாரர்கள் துப்புரவுத் தொழிலாளர்களை பயன்படுத்தி அடைப்பை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்துவது மத்திய அரசின் தடை சட்டத்திற்கு மாறானது, மேலும் உயர்நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாகும். கடலூர் நகராட்சியில் சட்டவிரோதமாக துப்புரவு தொழிலாளர்களை பயன்படுத்தி அடைப்பை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுபத்திய நகராட்சி ஆணையர் மற்றும் நகர்நல அலுவலர், ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது உரிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலையும், 10 லட்சம் நிவாரண தொகையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இத்தடைச்சட்டம் தமிழகத்தில் தொடர்ந்து மீறப்படுவதன் காரணமாக உயிரிழப்புகளை தடுக்கத்தவறிய தமிழக உள்ளாட்சித்துறை அதிகாரிகள் மீதும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே.ஆர்.கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply