காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் 36 ஊராட்சிகள், 40க்கும் மேற்பட்ட ஏரி குளங்கள் உள்ளன.  இங்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் 20000-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றார்கள்.  இவர்களில் 90 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதி மிட்ட அள்ளி, கந்திரிபுரம், கொல்லகொட்டாய், சாப்பரம், பனகமுட்லு, பட்நூர், காரம்பட்டி, கூசினி, மோரன அள்ளி போன்ற பகுதிகளில் உள்ள ஏரிகளில் வேலை நடைபெற்று வருகிறது.  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமசாமி, செயலாளர் கோவிந்தசாமி, வட்ட நிர்வாகிகள் குணசேகரன், வெங்கடாசலம், ரங்கநாதன், பெரியசாமி, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியச் செயலாளர் சி.பெரியசாமி, ஆகியோர் குழு 4 நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஏற்கனவே 100 நாள் வேலையை முடித்த சுமார் 15000-க்கும் மேற்பட்டவர்களுக்கு 3 மாதம் கடந்தும் கூலி வழங்கப்படவில்லை.  கூலி கொடுக்கப்பட்டவர்களுக்கும் தினமும் 203 ரூபாய் என்பதற்கு மாறாக ரூ.80, 90 என கணக்கிட்டு கூலி கொடுக்கப்பட்டுள்ளது.  கேள்வி கேட்டால் அடுத்த நாள் வேலைக்கு அனுமதிப்பதில்லை.  உடல் நலமில்லை என்று கூறி பெண்கள் பாதி நேரத்தில் விடுப்பு எடுக்க நேர்ந்தால், முழுநாள் கூலியும் தருவதில்லை.  சாப்பாட்டு நேரத்திற்கு உட்காரக்கூட நிழல் இல்லை.  குடிக்க தண்ணீர் இல்லை.  சட்டப்படியான உதவிகள், மருத்துவம் எதுவும் கிடையாது.  ஆனால் இவைகள் செய்து கொடுக்கப்படுவதாகவும், 203 ரூபாய் வீதம் கூலி கொடுக்கப்படுவதாகவும், அதிகமானவர்கள் வேலை செய்வதாகவும் மோசடியாக கணக்கு எழுதி அதிகாரிகள் முறைகேடுகள் செய்து வருவதாகப் புகார் வந்துள்ளது.

“எனவே விவசாயத் தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அடங்கிய ஆய்வுக் குழு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைத்து ஆய்வு செய்து முறைகேடுகள் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  203 ரூபாய் வீதம் கூலி பாக்கி உள்ளவர்களுக்கும் உடனே வழங்கிட வேண்டும்.  முன்பு குறைந்த கூலி கொடுக்கப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மீதித் தொகை வழங்கிட வேண்டும்.  சட்டப்படியான உதவிகள், மருத்துவம் செய்திட வேண்டும்.  கூலியை ரூ. 250 ஆக உயர்த்திட வேண்டும்” என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply