திருவண்ணாமலை,
திருவண்ணாமலை வட்டம் ஆருத்திராபட்டு கிராம மக்கள், பாதிக்கப்பட்டுள்ள தங்களுடைய வாழ்வாதாரத்தை மீட்கக் கோரி  மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:-

திருவண்ணாமலை அடுத்த வன்னியநகரத்தில் டாஸ்மாக் மதுக்கடை (9460) இயங்கி வருகிறது.  அந்தக் கடை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனவே, அதை அருகில் உள்ள சமுக்குடையான்பட்டு கிராமத்திற்கு மாற்ற உள்ளனர். அப்படி மாற்றும் பட்சத்தில் ஆருத்திராபட்டு பகுதியிலிருந்து  பிள்ளைகள் பள்ளி செல்லும் வழியில், புதிதாக மாற்றப்படும் மதுபானக் கடை அமையும். எனவே, மாணவ, மாணவிகளின் நலன் கருதி டாஸ்மாக் மதுக்கடையை வேறு ஏதேனும் பகுதிக்கு மாற்ற வேண்டும்.

அதேபோல, ஆருத்திராபட்டு ஏரியில் சுமார் 30 ஏக்கர் நிலங்களை தனியார் நபர்கள் அபகரித்துள்ளனர்.  நீர் வரத்து ஓடைகளை மூடிவிட்டனர்.  அப்பகுதி ஆடுமாடுகள் கூட, குடிக்க தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர்.  எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரிக்கு நீர்வரத்து வழி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

வேலூர்

அரக்கோணம் புளியமங்கலம் ஊராட்சியில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அரக்கோணம் நகர எல்லையை ஒட்டி அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அரக்கோணம் – மோசூர் சாலையில்  புளியமங்கலம் இரயில்வே கேட் பகுதியில் மாற்ற உள்ளனர். இதனால் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்கள் வேலைக்கு செல்லும் பெண்கள் ரயில்வே கேட் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் தான் ஏறி அரக்கோணம் செல்ல முடியும். மேலும் அருகில் தனியார் பள்ளி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை உள்ளன. இங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் குடிக்க வருபவர்களால்  குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அசம்பாவிதம் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் புளியமங்கலம் ஊராட்சியில் அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது என்று கோரி  மனு அளித்தனர்.

Leave A Reply