திண்டுக்கல், மார்ச்.20
திண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான வறட்சியின் காரணமாக அய்யலூர் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக 17 கிலோ பெட்டி ரூ.400 வரை உயர்ந்தது.
அய்யலூர் சந்தைக்கு வரும் தக்காளி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்த ஊரில் பிரதான தொழில் தக்காளி வேளாண்மையில் சுமார் 4 ஆயிரம் விவசாயிகள் தக்காளி விவசாயம் செய்து வருகின்றனர். இந்தாண்டு கடுமையான வறட்சியின் காரணாக பல தோட்டங்களில் உள்ள கிணறுகளில் தண்ணீர் இல்லை. இதனால் தக்காளி வரத்து குறைந்தது.

இது குறித்து தக்காளி கமிசன் மண்டியில் பணிபுரியும் ரெங்கராஜ் கூறியதாவது:- கோடை மழையை எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த வாரம் 17 கிலோ தக்காளி பெட்டி ரூ.200 வரை விற்றது. இந்த வாரம் ரூ.35 வரை விற்கத் துவங்கி திங்களன்று ரூ.400க்கு விலை போனது. சீசன் காலங்களில் 6000 பெட்டிகள் வரை தக்காளி வரத்து இருக்கும். போதிய மழை இல்லாததால் 400 பெட்டி தக்காளி மட்டுமே சந்தைக்கு வருகிறது என்றார். இதே நிலை தமிழகம் முழுவதும் இருக்க வாய்ப்பு உள்ளது. ஒட்டன்சத்திரம் சந்தைக்கு வரும் தக்காளி கேரள மாநில வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வார்கள். சென்னைக்கு ஆந்திரா தக்காளிகள் தான் சந்தைக்கு வரும். அய்யலூர் சந்தை தக்காளிகள் தான் தமிழக மக்களின் தேவையை பூர்த்தி செய்கிற சந்தையாக உள்ளது. இந்த தக்காளி விலை உயர்வால் விவசாயிகளுக்கும் எங்களுக்கும் மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் இந்த சீசன் தக்காளி ஓயும் சீசனாக உள்ளது. மழை பெய்தால் தான் இன்னும் கொஞ்சம் வரத்து இருக்கும். எங்கள் மார்க்கெட் தக்காளி அல்லாமல் நாசிக்கில் இருந்து தக்காளிகளை இறக்குமதி செய்கிற வியாரிபாரிகளும் உண்டு. ஆனால் இந்த முறை நாசிக் தக்காளி வந்ததாக தெரியவில்லை. கோடை மழை பெய்யும் பட்சத்தில் கூடுதல் வரத்து இருக்க வாய்ப்பு உள்ளது என்று ரெங்கராஜ் கூறினார்.

Leave A Reply