திருவள்ளூர்
சோழவரம் ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளில் பணிப்புரியும்  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கும், துப்புறவுத் தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் –என வலியுறுத்தி திங்களன்று (மார்ச் 20) சோழவரம் பிடிஒ அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாடியநல்லூர் ஊராட்சியில் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் துப்புறவு தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்,சீருடை, கையுறை,மழை கோர்ட்,சோப்பு உள்ளிட்ட பணிக்கருவிகள் வழங்க வேண்டும்,பணிப்பதிவேட்டில் பெயர் பதிவு செய்து பராமரிக்க வேண்டும்,அடையாள அட்டை வழங்க வேண்டும்,நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய அரசு ஆணைப்படி ரூ.300 வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளுர் மாவட்ட ஊரக வளர்ச்சித் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு சங்கத்தின் அலமாதி ஊராட்சி தொழிலாளர் எம்.பாலு தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர்.டி.கோவிந்தன்,மாவட்டத் தலைவர் பி.கதிர்வேல்,மாவட்டச் செயலாளர் ஏ.ஜி.சந்தானம்,பொருளாளர் ஏ.முரளி,தேவேந்திரன் உட்பட பலர் பேசினர். ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் அனைவரும் தங்கள் கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்த போராட்டத்தில் உள்ளதால் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகளை இயக்குபவர்களின் கோரிக்கைகளை தபால் மூலம் அனுப்பினர்.இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply