கடலூர்,
கடலூர் மாவட்டம்,  தில்லைநாயகபுரம் கிராமத்தில்  உள்ள கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. தினந்தோறும் உள்ளூர் பகுதி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட லாரிகள், டிராக்டர்களில் மணலை ஏற்றிச் செல்கின்றனர். 

இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தற்போது இப்பகுதி கிராமங்களில் நிலவும் கோடைகால குடிநீர் பஞ்சத்திற்கு மணல் குவாரியில் அதிக ஆழத்தில் மணல் வெட்டி எடுக்கப்படுவதே காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
மணல் குவாரியை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடந்து அரசு அதிகாரிகளுக்கு மனு  கொடுத்து வந்தனர்.  எந்த நடவடிக்கையும் எடுக்காததால் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

ஞாயிறன்று  புளியங்குடி, ஆழங்காத்தான், வீரசோழபுரம்  உள்ளிட்ட 25 கிராமத்தைச் சேர்ந்தவர்கள்   மணல் குவாரியிலிருந்து மணல் ஏற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி  குவாரி பகுதியில் திடீர்  மறியலில்  ஈடுபட்டனர்.   இதனால் மணல் ஏற்றுவதற்கு  காத்திருந்த 500க்கும் மேற்பட்ட லாரி, டிராக்டர்களுக்கு மணல் ஏற்றும் பணி  நின்றது.

இது குறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் ஜெயந்தி, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு  சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்கள்  அதிகாரிகளிடம், அளவுக்கு அதிகமான ஆழத்திலிருந்து மணல் வெட்டி எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் தட்டுபாடு, தண்ணீர் உவர்ப்பு தன்மைமையாக மாறுதல், அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் விலைக்கு மணல் விற்பனை செய்யப்படுதல்,கொள்ளிடகரை மற்றும் தெருக்களின் சாலைகள் சேதமடைந்து வருவதையும், அதிக வாகனங்கள் செல்வதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது என்று தெரிவித்தனர்.  அதிகாரிகள் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து 15தினங்களில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இதனைத் தொடந்து பெரும்பாலானோர் கலைந்து சென்றனர்.   தொடர்ந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிலரை காவல்துறையினர்  கைது செய்தனர்.

Leave A Reply