நாகர்கோவில், மார்ச் 20-
2004 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இடதுசாரிகளின் கடும் வற்புறுத்தலால் ஐக்கிய முன்னணி ஆட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் வேலை பெற்று வந்தனர். தற்போது ஆட்சியில் உள்ள மத்திய பாஜக அரசு, போதிய நிதி ஒதுக்காமல் திட்டத்தை ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியுள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியமும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் மத்திய பாஜக அரசை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அதிகரிக்க வலியுறுத்தியும், தற்போது வழங்கப்படும் ரூபாய் 205 கூலியை 400 ஆக உயர்த்தி வழங்க கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான குமரியில் 55 பேரூராட்சிகள் உள்ளன. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இங்கு ஏழை மக்கள் எந்த வேலையும் கிடைக்காததால் வறுமையில் வாடும் அவலம் உள்ளது. இந்த பகுதிகளில் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் அமல்படுத்தப்படவில்லை. தற்போது கடும் வறட்சி நிலவதோடு, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
நீர்பாசனப் பகுதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. ஆயிரக்கணக்கான குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதோடு, வரும் காலங்களில் குடிநீருக்கு கூட கையேந்தும் நிலை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
எனவே, நீர் நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்தவும், நீராதாரங்களை பாதுகாக்கவும், வேலைவாய்ப்புகளை வழங்கவும் 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிகளிலும் விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மலைவிளை பாசி தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் ஏ.லாசர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
அரிசி, பருப்பு, எண்ணெய் , காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாத அளவுக்கு விலைவாசியை மத்திய, மாநில அரசுகள் உயர்த்தி வருகின்றன. ஆனால் ஏழைகளுக்கு சம்பளம் மட்டும் அதிகரிக்கப்படுவதில்லை. தேர்தல் நேரத்தில் மோடி கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் போடுவேன் எனக் கூறினார். ஆனால் அவர் பிரதமரான 3 ஆண்டுகளில் விலைவாசி மட்டும் தான் உயர்ந்துள்ளது. மோடி ஆட்சிக்கு வரும் முன்பு 350 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை, தற்போது ரூ.790 ஆக உயர்ந்துள்ளது. 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்றார் மோடி. அப்படியென்றால் 3 ஆண்டுகளில் 6 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
தமிழ்நாட்டில் இதுவரை கண்டிராத வறட்சி நிலவி வருகிறது. குடிக்க கூட நீரில்லை. இதுபோன்ற நிலை குமரியில் எப்போதாவது ஏற்பட்டதுண்டா? இங்கு பழமையான நீர்நிலைகள் அதிகம் உள்ளன. தூர்ந்து போய் அழிந்து கொண்டிருக்கும் இந்த நீர் நிலைகளை, 100 நாள் வேலை திட்டம் மூலம் தூர் வாரி பராமரித்தால் குமரி மாவட்டம் மீண்டும் செழிப்பாகும். மத்திய அரசு தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து 100 நாள் வேலை திட்டத்தை 200 நாள் வேலையாக மாற்ற வேண்டும்.
அரசின் ஆவணத்தில் 205 கூலி என்று இருந்தாலும், ரூ.100, ரூ.110 மட்டும் தான் கூலியாக வழங்கப்படுகிறது. சட்டப்படி 205 ரூபாய் கூலி கேட்டால், அதிகாரிகள் மிரட்டுகின்றனர். மேலும் 40 அல்லது 50 நாட்கள் மட்டுமே வேலை கொடுக்கப்படுகிறது.
மாநில அரசு பட்ஜெட்டில் ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ரூ.1000 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது போதுமானதல்ல. மத்திய அரசு அளிக்கும் ரூ.4500 கோடியுடன், இந்த ரூ.1000 கோடியை சேர்த்தால் வருடத்திற்கு ரூ.5500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 90 லட்சம் விவசாய தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை கொடுக்க வேண்டுமென்றால் ஏறத்தாழ ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் தேவை.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் என்.முருகேசன், எம்.சாகுல் ஹமீது, எஸ்.தங்கப்பன், கே.சிவானந்தம், முன்னாள் எம்பி ஏ.வி.பெல்லார்மின், முன்னாள் எம்எல்ஏ ஆர்.லீமாறோஸ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply