சென்னை,
சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் இயங்கும் அரசு புறநகர் மருத்துவ மனையை தரம் உயர்த்தி சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுமா? என்றார்.

இதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “22.4.2015 ல் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி இந்த மருத்துவமனை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது” என்றார்.

துணைக் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், இந்த மருத்துவமனைக்கு சோலார் மின் அமைப்பு ஏற்படுத்துவதற்காக சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் கொடுத்திருக்கிறேன். சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும், சிறப்பு ஆம்புலன்ஸ் வேண்டும், மருத்துவர், செவிலியர் குடியிருப்பு மிகவும் பழுதாகி இருக்கிறது. அதை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் உள்ளன. செவிலியர் பற்றாக்குறை இருக்கிறது. எலும்பு மூட்டு மருத்துவர் பற்றாக்குறை இருக்கிறது. அதையும் தீர்க்க அரசு முன்வருமா என்று அவர் வினவினார்.

இந்த மருத்துவமனை மேம்பாட்டுக்கு அரசு நிதி ஒதுக்கி பல்வேறு பணிகளை செய்து வருகிறது. மருத்துவர்கள் தேவையோ 17, தற்போது 16 பேர் பணிபுரிகிறார்கள். செவிலியர் பணியிடம் 23 ஒதுக்கப்பட்டுள்ளது.  அதில் 21 பேர் பணிபுரிகிறார்கள்.

தமிழ் நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு இது வரை 9100 செவிலியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். விரைவில் 1200 பேர் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அப்போது இந்த மருத்துவமனைக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும். எதிர்க்கட்சித் தலைவரின் மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave A Reply