திண்டுக்கல்,
பழனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராத பழனி தேவஸ்தான நிர்வாகத்தைக் கண்டித்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. அது பற்றிய விவரம் வருமாறு.
பழனிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். தைப்பூசம். பங்குனி உத்தரம் போன்ற திருவிழாக்களின் போது தமிழகம் முழுவதுமிருந்தும் லட்சக்கணக்கானவர்கள் வருவார்கள். அவர்களில் மாற்றுத்திறனாளிகளும் உண்டு. அவ்வாறு வருகை தரும் பக்தர்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோரும் வருவார்கள். இவர்கள் நலனை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 2012ம் ஆண்டிலேயே நகராட்சி திருத்த சட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் தங்கு தடையின்றி அனைத்து இடங்களுக்கும் வந்து செல்ல ஏதுவாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் மற்றும் வெஸ்டர்ன் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை அனைத்தும் செய்து தர வேண்டும். பொதுமக்கள் கூடும் இடங்களிலும், வழிபாட்டு தளங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அமைத்துத்தர வேண்டும் என ஆணையிடப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றுவரை இச்சட்டம் அமல்படுத்தபடுவதில்லை. உதாரணமாக பழனி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அனைத்து கட்டிடங்களிலும் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளமோ அல்லது வெஸ்டர்ன் கழிப்பறையோ இல்லை. பழனிக்கு வருகை தரும் பக்தர்கள் இலவசமாக தங்குவதற்காக அடிவாரம் கிரி வீதியில் இரண்டு இடங்களில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இவ்விரு கட்டிடங்களிலும் 5000க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் தங்கி செல்லுமளவிற்கு கட்டிடம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டபோதும் இவ்விரு கட்டிடங்களிலும் மாற்றுத்திறனாளிகளோ அல்லது முதியோரோ எளிதில் உள்ளே செல்ல கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்கப்படவில்லை. நான்கு உயரமான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருப்பதால் எளிதில் யாரும் இந்த கட்டிடத்தை பயன்படுத்த முடியாத சூழலே உள்ளது. அதுமட்டுமின்றி இவ்விரு கட்டிடங்களிலும் 50க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் அமைக்கப்பட்டபோதும் ஒரு கழிப்பறை கூட வெஸ்டர்ன் கழிப்பறை வசதியுடன் அமைக்கப்படவில்லை.
மேலும் கடந்த வாரம் தமிழக முதல்வரால் திறக்கப்பட்ட பக்தர்கள் தகவல் மையத்தின் கட்டிடத்தில் சாய்வுதளம் அமைக்கப்பட்ட போதும் அந்த சாய்வுதளத்தின் பாதி அடைக்கப்பட்டிருக்கிறது. மேலும் முடி காணிக்கை செலுத்த வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக தனி இருக்கை அமைக்கப்பட்ட போதும் அந்த இருக்கையை அங்கு பணியில் உள்ள ஊழியர்களே பயன்படுத்தி வருகின்றனர். இப்படி மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் மாற்றுத்திறனாளிகள் அமரும்போது அங்கு பணியாற்றும் முடிஎடுக்கும் பணியாளர்களில் சிலர் வேண்டுமென்றே மாற்றுத்திறனாளிகளுக்கு முடி எடுக்காமல் புறக்கணிக்கின்றனர். இப்படியாக மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படையான எந்த ஒரு வசதியும் செய்து தராமல் வஞ்சிக்கும் பழனி தேவஸ்தான நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பழனி நகர் மற்றும் ஒன்றிய குழுக்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பழனி அடிவாரம் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள பக்தர்கள் தகவல் மையத்தின் முன்பாக நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு சங்கத்தின் பழனி நகர தலைவர் மாலதி அவர்கள் தலைமை வகிக்க நகர செயலாளர் தங்கவேல் ஒன்றிய செயலாளர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகிக்க சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங், சங்கத்தின் நிர்வாகிகள் காளிமுத்து, வெள்ளியங்கிர, மோகன், சதீஷ்குமார், கண்ணுச்சாமி, துரைச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேல் நடைபெற்ற போராட்டத்திற்கு பின்னர் பேச்சுவார்த்தைக்கு வந்த தேவஸ்தான அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் அதிகபட்சமாக ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றித்தருவதாக உறுதிமொழி அளித்தனர். அதன் அடிப்படையில் போராட்டம் முடிவுக்கு வந்தது. இப்போராட்டத்தில் 120க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளும் அவர்களது பாதுகாவலர்களும் கலந்துகொண்டனர். ஒரு மாதத்திற்குள் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மாபெரும் முற்றுகை போராட்டம் பழனி தேவஸ்தான நிர்வாகத்தை கண்டித்து நடைபெறும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்து போராட்டத்தை நிறைவு செய்தோம் என்று தெரிவித்தனர்.

Leave A Reply