கோவை _ உயிரை பறிக்கும் செயலை இஸ்லாம் ஒருபோதும் ஏற்காது எனவும் எங்கள் மார்க்கம் எங்களுக்கு, அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு என்கிற நிலையில்தான் இஸ்லாமிய அமைப்புகள் செயல்படுவதாகவும், மாற்று கருத்தாளர்களை கொலை செய்வது இஸ்லாத்திற்கு எதிரானது என்றும் பரூக்கின் படுகொலையை வன்மையாக கண்டிப்பதாக இஸ்லாமிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், திராவிடர் விடுதலை கழக பொறுப்பாளர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலைக்கான காரணத்தை கண்டறிந்து காவல் துறையினர் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தர வேண்டுமென கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை உக்கடம் பகுதியில் கடந்த 16 ம் தேதி திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த பாரூக் என்பவர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மத நம்பிக்கைகளுக்கு ஏதிராக பகுத்தறிவு கருத்துக்களை முன்வைத்து செயல்பட்டதால் பாரூக் கொலை செய்யப்பட்டதாக காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக அன்சர் மற்றும் சதாம் உசேன் ஆகியோர் சரணடைந்துள்ள நிலையில், மேலும் இரண்டு பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர், பாரூக் படுகொலைக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்தனர். பாரூக் படுகொலையில் பல்வேறு மர்மங்கள் மற்றும் சந்தேகங்கள் இருப்பதாகவும், இந்த கொலைக்கான காரணத்தை கண்டறிந்து காவல் துறையினர் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தர வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர். இஸ்லாம் மதத்திற்கு ஏதிராக பேசியதால் பாரூக் தனது நண்பர்களாலேயே கொலை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில்,  தனிநபர் செய்த கொலைக்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் குற்றம்சாட்டக்கூடாது என அவர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கொலையில் தொடர்புடையவர்களின் குடும்பத்தினரை சந்தித்து கவுன்சிலிங் வழங்க உள்ளதாகவும், தமிழகத்தில் முதல்முறையாக இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதால் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை ஜமாத்தில் இருந்து நீக்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும், அவர்களுக்கு எந்தவித சட்ட உதவியும் செய்ய மாட்டோம் எனவும் ஜமாத் அமைப்பினர் தெரிவித்தனர். மேலும், பாரூக் குடும்பத்தினரை சந்தித்து நிதியுதவி வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் 11 இஸ்லாமிய இயக்கங்களும், கோவை மாவட்ட அனைத்து ஜமாத் கூட்டமைப்பும் இதில் பங்கேற்றனர்.

 

Leave A Reply