தில்லி,

தமிழக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். காலம் தாமதிக்காமல் காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் தமிழக விவசாயிகள் இன்று ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் இந்தாண்டு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தனர். இந்நிலையில், தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அரை நிர்வாணமாகவும், பிச்சை எடுத்தும், கழுத்தில் மண்டை ஓட்டினை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் தொடங்கி 7 நாட்களாகிய நிலையில் மத்திய அரசின் சார்பில் இதுவரையில் அதிகாரிகள் யாரும் விவசாயிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் விவசாயிகளை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுடன், தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும். தமிழக விவசாயிகள் பிரச்சனை குறித்து மாநிலங்களவையில் எழுப்புவோம் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தம்பித்துரை, அன்வர்ராஜா உள்ளிட்டோர் போராடும் விவசாயிகளை சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அதற்கு கோரிக்கையை பரிசீலிக்க கூட பாஜக அரசு மறுக்கிறது. எனவே போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர். இந்நிலையில் மத்திய வேளாண் அமைச்சரை சந்திக்க அனுமதி பெற்று பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறி அங்கிருந்து அதிமுக எம்பிகள் நகர்ந்து சென்றனர்.

Leave A Reply