திண்டுக்கல், மார்ச்.20
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவில் உள்ள மலைப்பகுதிகளில் உயர் ரக கனிம வளங்களை எடுக்க ஆய்வு செய்யக்கூடாது. என்று கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்திலும் நெடுவாசலை போன்ற போராட்டம் தொடங்க உள்ளது.
இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு நீதி நாளில் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து மனுகொடுத்தனர். அது பற்றிய விபரம் வருமாறு.
வேடசந்தூர் அருகில் உள்ள குட்டம் கிராமத்திற்கு உட்பட்ட தேவிநாயக்கன்பட்டி, தலையூத்துப்பட்டி, நல்லபொம்மன்பட்டி, கணவாய்பட்டி, வளையபட்டி, கன்னிமார்பாளையம், தாசரிபட்டி, சுக்காம்பட்டி, குட்டம், கரட்டுப்பட்டி, ஆகிய 10 கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் கன்னிமார்பாளையத்திற்கு மேற்கே அமைந்துள்ள கருமலை துவங்கி, வடக்கே ரெங்கமலை வரை இந்திய நில அறிவியல் ஆய்வுத்துறை சார்பாக நிலத்தடி கனிம வள ஆய்வு என்ற பெயரில் பட்டா நிலங்களிலும், ஆய்வுமேற்கொள்ளப்பட்டு 500 மீட்டர் இடைவெளியில் கற்கள் நடப்பட்டு உள்ளது. இது குறித்து ஆய்வு செய்தவர்களிடம் விசாரித்த போது இப்பகுதியில் செம்பு, காரியம், துத்தநாகம், உள்ளிட்ட கனிம வளங்கள் உள்ளதாக கூறினர். கற்கள் நடப்பட்டிருக்கும் இடத்தில் ஆழ்துளையிட்டு ஆய்வு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த பகுதி முழுக்க விவசாய பகுதியாகும். இந்த பகுதியில் வெங்காயம் பயிர் சிறப்பாக விளையும் தன்மை கொண்ட மண். இப்பகுதியில் ஏற்கனவே 1000 அடிக்கும் கீழ் தான் நிலத்தடி கிடைக்கிறது. இப்பகுதியில் ஆய்வுக்காக ராட்சத போர்வெல் போடப்படும் சூழலில் ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கிற விவசாய போர்வெல், குடிநீர் போர்வெல்களும் வறண்டுவிட வாய்ப்பு உள்ளது. மேலும் நில உரிமையாளர்களின் அனுமதி இல்லாமலேயே பட்டா நிலத்தில் ஆய்வு செய்வது சட்டவிரோதமாகும். எனவே உடனடியாக இந்த ஆய்வுப் பணியை மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியரிடம் மனுகொடுத்தனர்.
மாவட்ட ஆட்சியர் வினய் கிராம மக்களிடம் தெரிவிக்கும் போது இது வெறும் ஆய்வு பணிதான். எனவே அச்சப்பட தேவையில்லை என கூறினார். கனிமவள சுரங்கம் மற்றும் கனிமவள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் கூறும் போது இந்த ஆழ்துளை கிணறுகள் அமைத்து ஆய்வுகள் செய்வதை தடுக்கக் கூடாது, ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது எங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிற விசயம், எங்கள் நிலத்தில் யார் வரம்புமீறி நுழைந்தாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றனர். இந்த பணி தொடர்ந்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என தெரிவித்தனர். இந்த இயக்கத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.முத்துச்சாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply