திருவள்ளுர்,
ஆர்.கே.பேட்டை அருகில் உள்ள அம்மநெரி கிராமத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர்  கேட்டு பிடிஓ அலுவலகத்தை திங்களன்று (மார்ச் 20) முற்றுகையிட்டனர்.

ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மநெரியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமத்தில் 2014-15 ம் ஆண்டில் 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்தேக்க நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதன் பின்னரும் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதனைப் போக்க போடப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் வராத காரணத்தால் கடந்த இரண்டு வாரங்களாக அக்கிராம மக்கள்  குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

ஊராட்சி செயலாளரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் கிராமத்தில் குடிநீரின்றி குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆடு மாடுகள் உட்பட அனைவரும்  தவித்து வருகின்றனர்.தாகத்தை தீர்த்துக்கொள்ள குடங்களுடன்  அருகில் உள்ள விவசாய பம்பு செட்டுகளைத் தேடி அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட அக்கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மநெரி கிளைச் செயலாளர்கள் தாயார், ரவி ஆகியோர் தலைமையில் ஆர்.கே.பேட்டை பிடிஒ அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டனர்.

இதில் சிபிஎம் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் சி.பெருமாள் உட்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தை தொடர்ந்து பிடிஒ விஜயகுமாரி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் டேங்கர் லாரிகள்  மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Leave A Reply