இப்படித்தான் அது நடக்கிறது. சென்ற நூற்றாண்டில் ஐரோப்பாவில் அது நடந்தது. ஜனநாயகம் முதலில் வலிமையான மனிதனுக்கு பலியாகிறது; பிறகு எதேச்சாதிகாரத்திற்கு; பிறகு அனேகமாக முழுச் சர்வாதிகாரத்திற்கு. இல்லை அது ஒரு அரசாங்கத்தின் முழுச் சர்வாதிகாரத்திற்கு பலியாக வேண்டுமென்றில்லை; உண்மையில் ஒரு கூட்டத்தின் சர்வாதிகாரத்திற்கு – ஒரு அரசாங்கம் தான் எப்போது வேண்டுமானலும் பயன்படுத்திக் கொள்ளத் தகுந்த கட்டுப்பாடான, கொலைகார கூட்டத்திற்கு.

ஒரு வலிமையான மனிதன் எழுகிறான். பணத்தைக் கொண்டு தன்னைச் சுற்றி மக்களைத் திரட்டிக் கொள்கிறான். பெரும்பான்மையின் சிறுபான்மை உணர்வைத் தோண்டி எடுக்கிறான் _ சிறுபான்மையினரினால் ஒடுக்கப்படுகிறோம் என்று உணரும் பெரும்பான்மையினரின் உணர்வினை. பரந்து கிடக்கும் பெரும்பான்மையின் கையில்தான் அதிகாரம் இருக்கிறது; ஆயினும் ஒரு சிறுபான்மையினால் தண்டிக்கப்படுகிறோம் என்று உணருமாறு அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. சூழல்களும், ராசிகளும் அவனுடன் நேர் கோட்டில் இணைகின்றன. நாட்டின் ஒரு பகுதியில் அவனுக்கென்று ஒரு தளத்தை உருவாக்கிக் கொள்கிறான். ஒரு காலத்தில் தீண்டத்தகாதவனாக இருந்த ஒன்றுக்கும் உதவாதவன் என்று ஒரு காலத்தில் ஒதுக்கப்பட்ட அவனுக்கு வலிமையும் செல்வாக்கும் கூடுகிறது. இருண்டிருக்கும் தேசிய மேடையில் சூரியன் போல் அவன் எழுகிறான். இருப்பதிலேயே வலிமை வாய்ந்தவனாக எழுகிறான். ஊழல் மேட்டுக்குடியினால் அடிக்கப்பட்டு, கனவுகள் சிதைக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்ட சாமானிய மக்கள் அவன் மீது நம்பிக்கை வைக்கின்றனர். அவர்களுடைய் நம்பிக்கைகளின் மொத்த உருவமாகவும், அவர்களுடைய கனவுகளைச் சுழற்றுபவனாகவும், அவர்களுடைய சொர்க்கங்களை நெய்பவனாகவும் ஆகிறான் அவன்.

சொர்க்கங்கள் அங்கு இல்லை. இருந்தாலும் அவற்றை உருவாக்குவதாக வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. வாக்குறுதிகளை இப்போது நம்ப இயலும்; ஏனென்றால் அவன் வாக்குறுதியைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறான்.

மயக்கும் பேச்சுக்கலையின் வித விதமான வார்த்தைகளால் வாக்குறுதியை உருவாக்குகிறான்; திரும்பத் திரும்பச் சொல்கிறான். உண்மையும் பொய்களும் ஒரு பிரச்சினையே அல்ல.

அமெரிக்க அரசியல் வல்லுனர் ஹான்னா ஆரெண்ட் இந்த நிகழ்வினை சரியாக விளக்குகிறார்: ”மாறிக் கொண்டே இருக்கும், புரிந்துகொள்ள முடியாத உலகத்தில், எல்லாவற்றையும் நம்புபவர்களாகவும், எதையும் நம்பாதவர்களாகவும், எல்லாமே சாத்திய மென்றும் எதுவுமே உண்மையில்லை யென்றும் ஒரே நேரத்தில் உணரும் ஒரு கட்டத்தை மக்கள் அடைகிறார்கள்.” ”இருப்பதிலேயே மோசமானதை, அது எவ்வளவு அபத்தமானதாக இருந்தாலும், தன் நேயர்கள் எல்லாக் காலத்திலும் அதை நம்பத் தயாராயிருக்கிறார்கள் என்பதை வெகுஜனப் பிரச்சாரம் கண்டுபிடித்து விட்டது.

அவர்கள் ஏமாற்றப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவிப்பதில்லை; ஏனெனில் எல்லாக் கூற்றுகளிலும் எப்படியாவது ஒரு பொய் இருக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்தச் சூழலில், மிகவும் கற்பனையானவற்றைக் கூட மக்களை நம்பவைக்க முடியுமென்றும், அடுத்த நாளே அவை பொய் என்று அறிவதற்கான மறுக்கவியலாத ஆதாரத்தைக் கொடுத்தால் அவர்கள் விரக்திக்குள் தஞ்சம் புகுந்து விடுவர் என்றும் மனோவியல் ரீதியாக சரியான புரிதலை ஆதாரமாகக் கொண்டுதான் சர்வாதிகாரப் போக்குடைய வெகுஜனத் தலைவர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை நடத்துகின்றனர். தங்களிடம் பொய் சொன்ன தலைவர்களைக் கைவிடாமல், தலைவர்களின் கூற்றுகள் பொய்யென்று தமக்கு எப்போதுமே தெரியுமென்று சொல்லி புத்திசாலித்தனமான தந்திரம் வகுப்பதில் அந்தத் தலைவர்களுக்கு இணையே இல்லை என்று புகழத் தொடங்கி விடுவர்,” என்றும் எழுதுகிறார் ஆரெண்ட்.

அது இப்படித்தான் நடக்கிறது. அவர் தேர்தல்களில் தொடர்ந்து வெல்கிறார். சிறுபான்மையினர் தங்களை ஒடுக்குகிறார்கள், தண்டிக்கிறார்கள் என்ற பார்வையின், உணர்வின் மீதுதான் அவர் சவாரி செய்கிறார்.

தேசியம் என்கிற சீட்டை அவர் விளையாடுகிறார். மண்ணில் முன்னெப்போதும் பார்க்கப் படாத உணரப்படாத ஒரு புதிய தேசியம் அது; ஒரே நேரத்தில் ஒதுக்கி வைக்கும், தன்னுள் இழுத்துக் கொள்ளும் தேசியம்; இப்போது இருக்கிறது, இப்போது இல்லை என்கிற மாதிரியான தேசியம். அவர் தன் நேயர்களை கைக்குள் வைத்திருக்கிறார்; அவர்களை எந்த இசைக்கும் ஆட வைக்க முடியும்; தூங்க வைக்க முடியும்; மீண்டும் எழுப்ப முடியும் – அவர்களின் வங்கிகளை மூடினாலும், அவர்களின் பணத்தையே எடுக்க முடியாமல் தடுத்தபோதிலும், அவர்களின் மீதிருக்கும் பிடியை விடாமல் இருக்க முடியும்.

அவர்களுக்கு வலியேற்படுத்திய போதிலும் அது அவர்களின் நன்மைக்கே என்று அவரால் வாதிட முடியும். அது என்ன நன்மை என்பதற்கு ஆதாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மறுபடியும் தேர்தலில் அவர் வெற்றிபெற வைக்கும் அளவு மக்கள் அவரை நம்பினர்; வழிபடவும் செய்தனர். அவர் தேர்தல்களில் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கிறார், ஜனநாயக முறையில். அவருக்கு எப்போதும் தயார் நிலையிலுள்ள தொண்டர்களின் ராணுவம் இருக்கிறது. இல்லை, இந்த ராணுவம் புதிதில்லை. அது நீண்டகாலமாக இருக்கிறது. அது பரந்த, எல்லோரையும் உள்ளடக்கிய தேசியத்திற்காக எப்போதுமே வேலை செய்ததில்லை. எப்போதுமே பெரும்பான்மையின் குறுகிய தேசியம் தான் அதன் இலக்கு.

இன்னொரு நாட்டில், இன்னொரு பயம்நிறைந்த காலத்தில் அது இன அடிப்படையிலான தேசியம். இங்கு, அது மத அடிப்படையிலான தேசியம். வெள்ளை மனிதனின் அன்னிய ஆட்சிக்கு எதிராகக் கூட அந்ந ராணுவம் எழுந்ததில்லை; ஏனெனில் அந்த காலத்தில் தன் மதத்துக்கு அந்த ஆட்சியினால் ஆபத்து இல்லை என்று அது நினைத்தது. ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை என்று அது நினைத்தைக் காப்பதற்கு மட்டுமே அந்த ராணுவம் இருந்தது. அது முற்றிலும் கட்டுக்கோப்பானது. அது இப்போது தெருக்களை ஆளுகிறது; பல்கலைக்கழகங்களை அடக்குகிறது; மாற்றுக் கருத்தை ராஜத்துரோகமென்று சொல்லி அடக்குகிறது; அதன் ‘கடவுளை’ – அந்த வலிமையான மனிதனையும் அவனுடைய செய்தியையும் – விமர்சிப்பவர்களை பூமியின் எல்லை வரை துரத்திச் செல்கிறது.

அவர்தான் புதிய மீட்பர் என்று வாழ்த்தப்படுகிறார். ஆர் எஸ் எஸ் என்கிற அந்த தொண்டர்களின் ராணுவம்தான் அவருடைய பழைய கல்வி நிறுவனம். ஒரு காலத்தில் அவர் அதன் பகுதியாக இருந்தார். சுதந்திர நாட்டின் சில ஊடகங்கள் செய்திகளை சுய தணிக்கை செய்து ‘நாட்டின் நலனுக்காக’, ‘அமைதிக்காக’, ‘இணக்கத்திற்காக’ என்று மட்டுமே பேசுகிறது – இறந்தவர்களின் அமைதிக்காக என்றுதான் நான் எடுத்துக் கொள்கிறேன். ராஷ்ட்ரீயா எஸ் எஸ் (சீக்ரெட் சர்வீஸ்) ‘அமைதியையும், ஒழுங்கையும்’ ஏற்படுத்துவதற்காகத்தான் இருக்கிறது. புதிய மீட்பரின் தலைமையில் கட்டப்படும் புதிய இந்தியாவிற்கு அமைதியான ஒப்புதல் தேவைப்படுகிறது; எதிர்ப்பு என்கிற அபஸ்வரம் நாட்டின் ‘அமைதிக்கும்’ ‘ஒருமைப்பாட்டிற்கும்’ ஆபத்தானது. ஆழமான ஜனநாயகப் பண்புகளை ஒருகாலத்தில் கொண்டிருந்த நாடு எந்த கடுமையான விமரிசனத்தையும் தாங்கும் சக்தியற்று சன்னமாகப் போய்விட்டது என்று திடீரென்று சங் பிரகடனம் செய்கிறது.

மண்வெட்டியை மண்வெட்டியென்று சொல்வது – அதாவது மகாத்மா காந்தியின் நாட்டில் உண்மையப் பேசுவது – இன்று கடுமையான விமர்சனமாகக் கருதப்படுகிறது. ஒருவருக்கு தன் உண்மையின் மீது இருக்கும் உரிமை குறைந்து கொண்டே வருகிறது; சில நேரங்களில் இல்லாமலே போய்விடுகிறது. வலிமையான மனிதனின் உண்மை மட்டுமே வலிமையாக இருக்கிறது; மேலெழும்பி வருகிறது. அவருடைய உண்மை மற்றவர்களின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது; பல பேரை அச்சுறுத்துகிறது. என்ன இருந்தாலும், சேவகம் செய்யும் உண்மையென்கிற ராணுவம் அவரிடம் இருக்கிறது. அப்படித்தான் இன்னொரு நாட்டில், இன்னொரு கால கட்டத்தில் – நீண்ட நாட்களுக்கு முன்பல்ல – ஒரு ராணுவம் இருந்தது. அதற்கு நல்ல முடிவு ஏற்படவில்லை. கெட்ட முடிவு என்பதைப் பற்றிய பயம் எதார்த்தமல்ல; சில நேரங்களில் மிகைப்படுத்தப்பட்டது என்று சிலர் கூறுகின்றனர். நம்பிக்கை அச்சத்துடன் மல்லுக்கட்டுகிறது. நம்பிக்கை வெல்லும் என்று நம்புவோம். இந்தியா வெல்லுமென்று நம்புவோம்.

(உத்திரப்பிரதேசத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் கனடா நாட்டின் சுகாதார அமைச்சராகவும், அந்நாட்டின் ஒரு மாநிலமான பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரதமருமான உஜ்ஜல் டோடாஜ்ச் ஆங்கில இணைய இதழான “தி வயரில்’ எழுதிய கட்டுரை)
தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்

Leave A Reply