விழுப்புரம்,
20 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மார்ச். 14 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் திங்களன்று (மார்ச் 20) இருநாள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.

விழுப்புரத்தில் இப்போராட்டத்தை துவக்கி வைத்து மாநிலப் பொதுச்செயலாளர் பெ.கிருஷ்ணசாமி பேசியதாவது : 

தமிழக மக்களின் அடிப்படை தேவைகளை அன்றாடம் நிறைவேற்றி வருவது ஊரக வளர்ச்சித்துறை ஆகும். கடும் வெயில், வறட்சி இதனால் நிலத்தடி நீர்மட்டம் மிக கீழே இறங்கியுள்ளது. குடிநீர் வினியோகம் சீராக செய்ய வேண்டியுள்ளது. கிராமப்புற மக்களின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு ஏழை மக்களுக்கு ஓர் ஆறுதலாக உள்ளது. கிராமப்புற சுகாதாரத்தைப் பாதுகாக்க தனிநபர் கழிப்பறை விஞ்ஞான ரீதியாக மிக தேவையான ஒன்றாக உள் து. குடியிருப்பிற்காக பாரத பிரதமரின் ரூ.1,70,000 ல் வீடு கட்டும் பணியை மார்ச் 16 முதல் துவக்க வேண்டியுள்ளது.

பொதுமக்கள் நூறுநாள் வேலைக்கான கூலி கிடைக்காமல் அலை மோதுகிறார்கள். குடிநீருக்காக தெருக்களில் குடங்களுடன் அலைகிறார்கள். இதனை சீராக செய்து கொண்டிருந்த வளர்ச்சித்துறை ஊழியர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் 14 ஆந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் பெயரில் ஆட்சி செய்யக் கூடியவர்கள் அவர் 110 விதியின் கீழ் அறிவித்ததைக்கூட அமலாக்க மறுக்கின்றனர். அவர் காலத்தில் பேச்சுவார்த்தை மூலம் ஏற்றுக் கொண்ட கீழ்கண்ட கோரிக்கைகளைக்கூட நிறைவேற்றாமல் 2ஆண்டு காலமாக ஏமாற்றுகிறார்கள். மானிய கோரிக்கையில் நமது கோரிக்கைகள் நிறைவேறுமென்று எதிர்பார்த்திருந்து ஊழியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே மக்களையும் மக்கள் நலன் சார்ந்த அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வளர்ச்சித்துறை ஊழியர்களை இனியும் ஏமாற்ற வேண்டாம்.

மக்கள் நலன் பாதிக்காமல் வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தோடு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்டபடி ஊராட்சி செயலாளர்களை முழுநேர ஊழியர்என அறிவிக்கப்பட்டு முழுநேர ஊதியம் கொடுக்காமல் இருப்பதை தவிர்த்து அதற்கான ஊதியத்தை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். அதுவரை அவர்களுக்கு ஏற்றுக் கொண்டபடி தேர்வுநிலை, சிறப்புநிலை, பொறுப்புப்படி, ஓய்வூதியத்திற்கு முந்தைய பணிக்காலத்தில் 50 விழுக்காடு சேர்த்தல், வரையறுக்கப்படாதகாலமுறை ஊதியத்தில் உயர் ஊதியம் தருவது என்று ஏற்றுக் கொண்டபடி தமிழக அரசு மனசாட்சியோடு வழங்க வேண்டும்.
முறையாக அழைத்துப்பேசி போராட்டத்தை தமிழக அரசு முடிவுக்கு  கொண்டு வரவேண்டும். இல்லையெனில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள்  பங்கேற்கும் காத்திருப்பு போராட்டம் செவ்வாய்கிழமை (மார்ச் 21) வரை நடைபெறும். அரசாணையை வழங்கக் கோரி பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை திரட்டி சென்னையில் வரும் 22ஆம்தேதி துறை இயக்குநரிடம் பெருந்திரள் முறையீடு செய்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலப்பொருளாளர் வி.நாகராஜன், மாவட்டத்தலைவர் கொளஞ்சி வேலு,  செயலாளர் ரத்தினம் உள்பட பலர் பேசினர்.

Leave A Reply