திண்டுக்கல், மார்ச்.19
10 ஆண்டுகளுக்கு மேலாக சிறுபான்மை மக்களுக்காக அமைக்கப்பட்ட நீதியரசர்கள் சச்சார்குழு, மற்றும் ரெங்கநாத் மிஸ்ரா பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில அமைப்பாளர் நூர்முகமது வேதனைதெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் ஞாயிறன்று நடைபெற்ற இவ்வமைப்பின் 2வது மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு நூர்முகமது பேசுகையில்: இந்த குழுக்களின் பரிந்துரைகள் கடந்த முறைஆட்சி செய்த காங்கிரஸ் அரசும் அமுலாக்க முன்வரவில்லை. தற்போது உள்ள மோடி அரசும் அமுலாக்க முன்வரவில்லை. தலித் கிறித்துவர் மற்றும் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு அமலாகவில்லை. இதனால் இந்த மக்கள் கல்வி, வேலை வாய்ப்பில் பின்தங்கி உள்ளனர். மோடி நிர்வகிக்கும் இந்த மத்திய அரசில் சிறுபான்மை மக்கள் எப்போதும் ஒரு பதட்டமான சூழலை எதிர்நோக்கி உள்ளார்கள்.

உத்தரபிரதேச தேர்தலில் 300க்கும் மேற்பட்டவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஒருவர் கூட இஸ்லாமியர்கள் இல்லை என்பது வேதனைக்குரியது.தேர்தலின் போது இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பிரச்சாரத்தை செய்தனர். இந்த நாடு ஒரு மதசார்ப்பற்ற நாடு என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாத நிலை உள்ளது. சிறுபான்மை மக்கள் வாழ்வதற்கான உரிமை, வழிபாடு நடத்துவதற்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சிறுபான்மை மக்களின் நலனை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். இதில் இந்துக்கள் இருக்கலாம், இஸ்லாமியர்கள் இருக்கலாம், கிறி;ஸ்துவர்கள் இருக்கலாம். மதநல்லிணக்கத்தை, மக்கள் ஒற்றுமையை பாதுகாப்பவர்கள் இருக்கலாம். மதவெறியை எதிர்ப்பவர்கள் இருக்கலாம். எல்லா மதங்களும் மனித நேயத்தைத் தான் போதிக்கிறது. ஆனால் இன்றைக்கு எந்த மதங்களும் சொல்லாத குரோதத்தை ஆர்.எஸ்.எஸ். உண்டாக்குகிறது. இங்கே மதநல்லிணக்கததிற்காக மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதே வேளையில் கோவையில் மத துவேசத்தை விததைக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநாடும் நடைபெறுகிறது. அன்பை விதைப்பதற்கு எதிராக அராஜகத்தை கட்டவிழ்ப்பதற்காக அந்த மாநாடு நடைபெறுகிறது. எனவே மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் இந்த மண்ணில் மனித நேயத்தை வலுவாக எடுத்துச் செல்ல அணிதிரள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு நூர்முகமது பேசினார்.

மூசா இந்தியாவில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்ற பிரச்சாரம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த நாட்டில் இஸ்லாமியர்களை ராணுவத்தில் சேர்க்கக்கூடாது என்ற எழுதப்படாத சட்டம் உள்ளது. இதே போல் காவல்த்துறையிலும் ஆள் எடுக்கவில்லை. தமிழகத்தில் ஆட்சி செய்த 50 ஆண்டுகால திராவிட ஆட்சியிலும் இதே நிலை தான். அண்ணா முதல் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரது ஆட்சியையும் சேர்த்து தான் சொல்கிறேன். ஆயிரத்தில் ஒரு முஸ்லீமை காவல்த்துறையில் ஆள் எடுத்திருப்பார்கள். சச்சார் குழு, ரெங்கநாத் மிஸ்ரா பரிந்துரைகள் அமுலாகவில்லை. பாகிஸ்தான் ஒரு முஸ்லீம் நாடு என்று தன்னை அறிவித்துள்ளது. அங்கே பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இந்துக்கள் போட்டியிட இடஒதுக்கீடு அமலாகிறது. ஆனால் இந்தியா தன்னை மதசார்ப்பற்ற நாடு என்று அறிவித்தாலும் இங்கே இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு அமலாவில்லை. சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் போட்டியிட இடஒதுக்கீடு இல்லை. பாபர்மசூதி இடிக்கப்பட்டு அ;நத வழக்கு 25 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய அத்வானி, முரளிமனோகர்ஜோஷி, வினய்கத்தியார், உமாபாரதி, என யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. ஆனால் இந்த நாட்டில் எந்த குற்றமும் செய்யாமல் இஸ்லாமிய இளைஞர்கள் இந்திய சிறைகளில் கடந்த 20 ஆண்டுகளாக விசாரணைக் கைதிகளாகவே சிறையில் உள்ளனர். இது தான் இந்த நாட்டின் ஜனநாயகமா? மேலும் முஸ்லீம்களை உலகம் முழுவதும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கிற முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியாவிலும் அந்த முயற்சிகளை இந்துத்துவா சக்திகள் செய்கிறார்கள். காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு முஸ்லீமா? இந்திரா காந்தியை அவரது மெய்க்காப்பாளர்கள் அவரது உடலை சல்லடை போல சுட்டுக் கொன்றவர்கள் முஸ்லீமா, ராஜீவ் காந்தியை அவரது உடல் துண்டு துண்டாக வெடித்து சிதறச்செய்த கொலையாளிகள் இஸ்லாமியரா? இது போன்ற இந்தியாவை உலுக்கிய அரசியல் கொலைகளில் கூட இஸ்லாமியர்கள் இல்லை. உலகில் முதல் உலகப் போரையோ, 2ம் உலகப் போரையோ கூட இஸ்லாமியர்கள் நடத்தவில்லை. ஈரான், ஈராக் மீது அந்த நாட்டில் உள்ள எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்க அமெரிக்கா தான் போர் தொடுத்தது. இஸ்லாமியர்கள் முதலில் போர் தொடுக்கவில்லை. எனவே இது போன்ற பிரச்சாரத்திற்கு மக்கள் பலியாகக்கூடாது இவ்வாறு மூசா பேசினார்.

இந்த மாநாட்டில் மாநில துணை அமைப்பாளர் டி.லட்சுமணன் துவக்கி வைத்தார். ஜமால்முகமது நன்றி கூறினார். இம்மாநாட்டில் புதிய மாவட்டத்தலைவராக ஏ.அரபுமுகமது, மாவட்ட துணைத்தலைவர்கள் ஜபரல்லாகான், டி.ஸ்டாலின்,எம்.கே.சம்சுதீன், மாவட்டச் செயலாளராக வ.கல்யாணசுந்தரம், துணைச்செயலாளர்களாக சூசைமேரி, ஜமால்முகமது, முகமதுஅலிஜின்னா. பொருளாளராக சௌகத்அலி ஆகியொர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திப்புசுல்தான் ஹைதர்அலி நினைவு மண்டபத்தை திறக்க வேண்டும் இம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திண்டுக்கல்லில் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள திப்புசுல்தான் ஹைதர் ஆகியோரின் நினைவு மண்டபத்தை உடனடியாக திறக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு என தனி துறை அமைக்கப்பட வேண்டும். கல்வி வேலைவாய்ப்பில் சிறுபான்மை மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாலையில் அய்யலூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Leave A Reply