மார்ச் -2ந் தேதி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை தாமிரபரணி நீரை பெப்சி நிறுவனம் பயன் படுத்துவது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்தது. ‘‘தாமிரபரணியிலிருந்து உபரி நீரை உறிஞ்சிக் கொள்ள தடையில்லை’’ என்பதுதான் அந்த தீர்ப்பு. இந்த தீர்ப்பு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நூற்றாண்டு கண்டிராத வறட்சி தமிழகத்தில் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் நிலையில், பல லட்சக்கணக்கான ஏக்கர்களில் பயிர்கள் கருகிப்போய் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் வறட்சியால் மாண்டு போயுள்ள நிலையில், குடி தண்ணீருக்காக மக்கள் குடங்களுடன் அலைந்து கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் குளிர்பான ஆலைக்கு தண்ணீர் எடுத்துக் கொள்ள அனுமதி என்பது ஆத்திரத்தை அதிகப்படுத்தவே செய்கிறது.

நெல்லை மாவட்டத்தில் பொதிகை மலையில் பிறக்கும் தாமிரபரணியாறு மொத்தம் 120 கி.மீட்டர் நீளமே ஓடுகிறது. பொதிகை மலை மீதே 24 கி.மீ. ஓடி மீதமுள்ள 96 கி.மீ. கடந்து முண்டந்துறையை அடைகிறது. கால்வாய்கள் மூலம் 283 கி.மீட்டர் நீளத்திற்குரிய நீர் கொண்டு செல்லப்படுகிறது. 5000 ச.கி.மீ. பரப்பளவிற்கு மேல் வயல் வெளிகளை செழிக்கச் செய்கின்றது. தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 1742 ஆம் ஆண்டு பாபநாசம் அணை கட்டப்பட்டது. இந்த மேலணையிலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் கீழணை கட்டப்பட்டுள்ளது. பலதுணையாறுகள் தாமிரபரணியில் கலக்கின்றன. மலைப் பகுதிகளிலேயே சேர்வையாறு, மணலாறு, கரியாறு, பாம்பாறு, உள்ளாறு, பேயாறு, கொடலையாறு போன்ற துணையாறுகள் கலப்பதால் வேகமாகவும், விரைவாகவும் நீர்ப் பெருக்கம் கொண்டு ஓடுகின்றது. சமவெளியில் ஓடும்பொழுது சிற்றாறு, பச்சையாறு, வரகனாறு, கடனாறு, மணி முத்தாறு ஆகிய துணையாறுகள் கலக்கின்றன.

பெருமை பலபடைத்த தொன்மைமிக்க இந்த ஆற்றின் நீர்வளத்தை சூறையாட நீதிமன்ற உத்தரவு எனும் பெரும் பாதுகாப்புடன் பெப்சி நிறுவனம் களமிறங்கியிருக்கிறது. இதனால் நெல்லை சீமை முழுவதும் மக்கள் கோபக்கனல் தெறிக்க பெப்சியை விரட்ட காத்திருக்கின்றனர். தாமிரபரணியாறு நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்ட மக்களின் 20 கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் ஆதாரமாகவும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பாசன ஆதாரமாகவும் தொழிற்சாலைகளுக்கு நீர் வழங்கும் முக்கிய ஆறாகவும் விளங்குகிறது. நாள்தோறும் திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு 12.15 கோடி லிட்டர், தூத்துக்குடி மற்றும் இராமநாத புரம் மாவட்ட மக்களுக்கு 10 கோடி லிட்டர், விருதுநகர் மாவட்ட மக்களுக்கு 50 லட்சம் லிட்டர், தொழிற்சாலை பயன்பாட்டுக்காக 5 கோடி லிட்டர் என பயன்படுத்தப்படுகிறது.

1996ல் 2000 ஏக்கர் பரப்பளவில் கங்கை கொண்டான் கிராமத்தில் சிப்காட் அரசால் அமைக்கப்பட்டது. இதில் அமைக்கப்பட்டுள்ள 27 நிறுவனங்களுக்கு 18,40,871 லிட்டர் தண்ணீரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 73 நிறுவனங்களுக்கு 15,89,769 லிட்டர் தண்ணீரும் பயன்படுத்தப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலை மட்டும் 94,37,133 லிட்டர் நீரை பயன்படுத்துகிறது. 2004ல் கோக்ககோலா கம்பெனி அமைக்க 31.54 ஏக்கர் நிலத்தை 99 வருட குத்தகைக்கு அரசு வழங்கியது. இந்த குளிர்பான நிறுவனம் 1000 லிட்டர் தண்ணீரை 37.50 பைசா விலையில் ஒரு நாளைக்கு 9 லட்சம் தண்ணீரை எடுத்துக் கொள்ள அரசு அனுமதித்தது. அதாவது ஒரு லிட்டர் தண்ணீர் மூனே முக்கால் பைசாவுக்கு இந்த நிறுவனம் எடுத்துக் கொள்ளலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. இதே போல் பெப்சி நிறுவனத்திற்கு 36 ஏக்கர் நிலம் 99 ஆண்டுகளுக்கு ஏக்கருக்கு 15 லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் வழங்கியுள்ளது. அதாவது ஒரு ஏக்கர் நிலம் வருடத்திற்கு ரூ.15,000 குத்தகை, இந்த கம்பெனி ஒரு நாளைக்கு 15 லட்சம் லிட்டர் தண்ணீரை ஆயிரம் லிட்டருக்கு 37.50 பைசா என்ற விலையில் எடுத்துக் கொளள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அரசின் சார்பில் பொதுப்பணித்துறை செயலாளரும் தாமிரபரணி ஆற்றின் செயற்பொறியாளரும் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

முழுக்க முழுக்க கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக, இந்த இரண்டு கம்பெனிகளும் பயன்படுத்தும் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கும் நீரில் மிக மிக சொற்ப அளவே என்றும், இத்தகைய உபரி தண்ணீரை மேற்கண்ட கம்பெனிகள் எடுப்பதால் பொது மக்களின் தேவைக்கு எவ்வித பற்றாக்குறையும் ஏற்படாது என்றும் ஆண்டுதோறும் பருவ மழைக்காலத்தில் மித மிஞ்சிய தண்ணீர் கடலில் சென்று வீணாகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் பெப்சி, கோக் இரண்டு நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நீரின் அளவு கடலில் வீணாக கலக்கும் நீரில் ஒரு சதவீதம் மட்டுமே என்று அழுத்தமாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், தென் மாவட்ட மக்களின் சமூக – பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காகவே தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளை இந்த நிறுவனங்களுக்கு அளித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கு மேலும்,பெப்சி – கோக் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளவர்கள் வெளிப்படையாக பார்ப்பதற்கு அப்பால் உள்நோக்கத்தோடு வழக்கை தாக்கல் செய்துள்ளனர் என்றும், ஏற்கனவே செஞ்சிலுவை சங்கத்தின் தலைவராக இருந்த போது மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையால் அதிலிருந்து ராஜினாமா செய்தவர் என்றும், பெப்சி – கோக் கம்பெனியின் வழக்கறிஞர்களாகவே மாறி வாதிட்டுள்ளனர்.

தமிழக அரசே, தாமிரபரணி தண்ணீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றுத் தீர்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டிருக்கும் போது நீதிபதிகள் என்ன செய்வார்கள். தென் மாவட்ட மக்களின் சமூக – பொருளாதார நிலை உயர்வுக்காகத்தான் இந்த கம்பெனிக்கு பல்வேறு சலுகைகள் என்றார்கள் அல்லவா! எவ்வளவு பேர் முன்னேற்ற மடையப் போகிறார்கள் என்று பாருங்கள். பெப்சி கம்பெனியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட சேர்த்து 150 தொழிலாளர்கள், கோக் கம்பெனியில் 350 தொழிலாளர்கள். இந்த 500 பேருக்கு வேலை தரத்தான் நீரையும் – நிலத்தையும் மிக மிக சொற்ப காசுக்கு தாரை வார்த்திருக்கிறது தமிழக அரசு. எனவே, இதில் முதல் குற்றவாளி தமிழக அரசுதான். இதற்கான பரிகாரத்தையும் தமிழக அரசுதான் செய்ய வேண்டும்.மேற்படி மாவட்டங்களில் பல வட்டங்கள் மானாவாரியாகவும், வறண்ட பிரதேசமாகவும் இருந்து வருகிறது. குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மக்கள் ஆண்டுதோறும் அல்லல்பட்டு வருகின்றனர்.

பாசனத்திற்கு தண்ணீர் கேட்டு தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் ஆண்டுதோறும் போராடி வருவதை தமிழக அரசு அறியும். மிதமிஞ்சிய தண்ணீரை வைத்துக் கொண்டு பாசனத்திற்கு தண்ணீர் தராமல் அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறதா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது அல்லது பன்னாட்டு குளிர்பான நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு பெற வேண்டுமென்ற நோக்கத்தோடு தமிழக அரசின் பொதுப்பணித்துறைச் செயலாளர் உண்மைக்கு மாறான தகவல்களை நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளாரா என்பதை விளக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பாகும். கடலுக்கு செல்லும் தண்ணீரை சேமித்து வைக்க உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக வீணாக கடலில் கலக்கிறது என்பது அறிவுடமையாகாது. அதையே காரணமாக கூறி கோக் – பெப்சிக்கு தண்ணீர் தருவது பச்சை தண்ணீர் துரோகம்.

ஒரு மனிதன் ஆரோக்கியமாக பூமியில் உயிர்வாழ பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுத்தமான காற்று, சத்தான உணவு இவை மூன்றும் அவசியம். ஆனால், நிலைமை இதற்கு நேர்மாறாக இருக்கிறது. அதிலும் உலகமயமாக்கல் கொள்கை அமலாக்கப்பட்ட பிறகு நகர்மயமாதல், தொழிற்சாலை பெருக்கம், ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு, சுகாதாரமின்மை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளால் நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டேயிருக்கிறது. எனவே, பெப்சி – கோக் கம்பெனிகளுக்கு சாதகமான தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். எதிர்கால சந்ததியினரின் தண்ணீர் தேவையை நிறைவேற்றும் வகையில் குளிர்பான ஆலைகளுக்கான அனுமதியை அரசு ரத்து செய்யவேண்டு மென்பதே தாமிரபரணியை பாதுகாக்க விரும்பும் அனைவரின் ஏகோபித்த குரலாகும். தமிழக அதிமுக அரசு தாமிரபரணியை பாதுகாக்க முன்வரவேண்டும் இல்லையென்றால் தமிழகம் மிகப்பெரும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும்.

கட்டுரையாளர்: மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

Leave a Reply

You must be logged in to post a comment.