நாக்பூர், மார்ச் –

வலதுசாரிகளும், நாக்பூர் பல்கலைக் கழக துணை வேந்தரும் பகுத்தறிவுச் சிந்தனையை எதிர்கொள்வதற்கே பயந்து நடுங்குகிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

நாக்பூரில் ராஷ்ட்ரகந்த் துக்காதோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சீத்தாராம் யெச்சூரி சனிக்கிழமையன்று, ‘’ஜனநாயகமும் அதன் மாண்புகளும்” என்கிற தலைப்பில் உரை நிகழ்த்துவதாக இருந்தது. இப்பல்கலைக்கழகத்தின்
அம்பேத்கர் சிந்தனைகள் துறை சார்பில் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. எனினும் இப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், வலதுசாரி அமைப்புகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து, திடீரென்று இக்கூட்டத்தை “காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக” அறிவித்தார். இம்மிரட்டலுக்கு அஞ்சாமல் கூட்டம் நடைபெற்றது. எனினும் பல்கலைக்கழக வளாகத்தில் கூட்டம் நடைபெறாமல், நாக்பூரில், தீக்சாபூமி என்னுமிடத்தில் இருந்த டாக்டர் அம்பேத்கர் கல்லூரியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

 

அங்கே பெரும் திரளாகக் குழுமியிருந்தோரிடையே சீத்தாராம் யெச்சூரி
பேசியதாவது:

“நம்மைப் பார்த்து துணை வேந்தர் ஏன் பயந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. நாம் இந்திய சிப்பாய்கள். நாம் நம் நாட்டின் நலன்களுக்காகப் போராடுவதை எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது. பகுத்தறிவுச் சிந்தனைகளை எதிர்கொள்வதற்கு அஞ்சுகிற கோழைத்தனத்தைவிட பெரிதாக வேறெதுவும்
இருக்க முடியாது. விவாதங்களைக் கண்டு பயந்து ஓடாதீர்கள். குறைந்தபட்சம் நாங்கள் என்ன சொல்கிறோம் என்றாவது கேளுங்கள். டாக்டர் அம்பேத்கர் அரசமைப்புச்சட்டத்தின் வரைவை தாக்கல் செய்து அரசியல் நிர்ணயசபையில் பேசும்போது, நம் நாட்டில் மிகவும் மோசமாகவுள்ள சமூக, பொருளாதார முரண்பாடுகளை ஒழித்துக்கட்டாமல் போனால், இது அரசமைப்புச்சட்டம்
உருவாக்குகின்ற மதச்சார்பற்ற, ஜனநாயக அமைப்பிற்கும் ஆபத்தினைக் கொண்டுவரும் என்று நம்மை மிகவும் சரியாகவே எச்சரித்திருந்தார்.  இன்றைய
பாஜகவின் அரசாங்கத்தின்கீழ், அரசியல், சமூக மற்றும் பொருளாதார அநீதிகள்
நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துகொண்டிருக்கின்றன.

டாக்டர் அம்பேத்கர் உயர்த்திப்பிடித்த, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் மும்மூர்த்திகள் இன்று முற்றுகைக்கு உள்ளாகி இருக்கின்றன. இத்தாக்குதலை முறியடித்து விடுவிப்பதற்கான போராட்டத்தை நாம் மேற்கொள்வோம். நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும், அவர்களின் சாதி, நிறம், மதம் அல்லது பாலினம் எதுவாக இருந்தாலும் அனைவருக்கும் அம்பேத்கர் அளித்திட்ட உத்தரவாதத்தை அமல்படுத்திட நாம் அனைவரும் ஒன்றுபட்டுநின்று  செயல்படுவோம்.

இந்தியா நம் அனைவருக்கும் சொந்தமானது. நாம் எந்த மதத்தினராக இருந்தாலும்,
எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த வர்க்கத்தைச்
சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த நிறத்தை (creed) சேர்ந்தவராக
இருந்தாலும், எந்தப் பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனைவருக்கும்
சம அளவில் சொந்தமாகும். இதனைச் சீர்குலைத்திட பாஜக மேற்கொள்ளும்
நடவடிக்கைகளை நாம் அனுமதித்திடமுடியாது.” இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

கேரளாவில் தங்கள் ஊழியர்கள்மீது தாக்குதல்தொடுக்கப்படுவதாக ஆர்எஸ்எஸ்
கூறிக்கொண்டிருக்கிறதே என்று ஒருவர் கேட்டபோது, “எங்கள் கட்சியின்
தலைமையில் அங்கே ஆட்சி அமைக்கப்பட்டபின் நடைபெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட 11 பேரில் 7 பேர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள். முதலமைச்சரின்
வெற்றிப் பேரணியில் வெடிகுண்டு வீசப்பட்டதில் எங்கள் ஊழியர் ஒருவர் மரணம்
அடைந்திருக்கிறார். யார், யாரைக் குறை கூறுவது?” என்று கேட்டார்.

உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்து ஒருவர் கேட்டபோது,
“உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் முடிவு, ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று
அறிவித்ததை சரி என்று கூறுகிறது என்ற முடிவுக்கு வரக்கூடாது. முறைசாராத்
தொழில்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டது. இதனை அரசாங்கத்தின்
புள்ளிவிவரங்கள் பிரதிபலித்திடவில்லை,” என்றார்.

Leave A Reply