தமிழகத்தில் துவங்கப்பட்ட சத்துணவுத் திட்டம் சிறப்புடன் நடத்தப்பட காரணமாக செயல்படுவது சத்துணவு ஊழியர்கள் தான். தமிழகத்தில் 1983ல் கிராமங்களில் துவங்கப்பட்ட திட்டம் நகர் பகுதிக்கும் விரிவுபடுத்தப்பட்டு 42700 மையங்களில் தற்போது 52 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தின் போதெல்லாம் திட்டத்தில் மாற்றங்கள் செய்கிறார்கள். ஆனால் உணவு தயாரிப் பதற்கான காய்கறிகள், விறகு, மளிகை சாமானிகள் வாங்குவதற்கு விலைவாசி உயர்வுக்கேற்ப மானியம் வழங்க ஆட்சியாளர்கள் மறுத்து வருகிறார்கள்.

ஒரு பள்ளியில் 150 மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பின் மாதத்திற்கு 20 வேலை நாள் எனில் விறகுக்கு அரசு அனுமதித்த தொகை ரூ.1356 (சுமார்) இந்த தொகையில் எரிவாயு சிலிண்டர் 2 தான் வாங்கமுடியும். ஒரு சிலிண்டரில் 750 குழந்தைகளுக்கு தான் பயன்படுத்த முடியும். மாதத்திற்கு 4 சிலிண்டர்கள் தேவைப்படும் 4 சிலிண்டரின் விலை ரூ.2560 ஆகும். அரசு அனுமதித்த தொகையை விட ரூ.1204 பற்றாக்குறை ஏற்படுகிறது. அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதோடு, எரிவாயு ஏஜன்சி மாதத்திற்கு 4 சிலிண்டர்கள் தர மறுக்கிறார்கள். அரசு அனுமதிக்கும் மானியத்தில் உணவு தயாரித்து வழங்கினால் அரசின் நோக்கத்திற்கு எதிராகும் என்பதை அதிகாரிகள் ஆட்சியாளர்களுக்கு தெரிவிக்க மறுக்கிறார்கள் என்பது தான் உண்மை. இதற்கான மானியத்தையும் முன் மானியமாக வழங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொண்டக் கடலை, பாசிப்பயிறு சத்துணவு மையங்களுக்கு தேவைக்கேற்ப வழங்குவதில்லை.  திட்டத்தில் தியாக உணர்வோடு ஊழியம் செய்பவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் விதவைகள் என இளமையில் பணிக்கு வந்து திட்ட நலனுக்காக உழைத்து சக்தியை இழந்து முதுமையில் தள்ளாடிய நிலையில் வெறும் கையில் எவ்வித பாதுகாப்பும் இல்லாத நிலையில் தெரு ஓரங்களிலும், ஆறுகளிலும் அனாதை ஆகும் நிலை ஏற்பட்டு வருகிறது என்பது வேதனை-. இத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் 33 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில் அமைப்பாளர் ஊதியம் ரூ.2500 – 5000 தர ஊதியம் ரூ.500ம் சமையலர் ஊதியம் ரூ. ரூ.1300 – 3000 தர ஊதியம் ரூ.300ம் உதவியாளர் ஊதியம் ரூ.950 – 2000 தர ஊதியம் ரூ.200 என்ற ஊதியக்கட்டில் சிறப்பு காலமுறை ஊதியமாக வழங்கப்படுகிறது.

இதே கல்வித்தகுதியில் அரசுத்துறையில் பணியில் சேர்ந்தவர்கள் பெறும் ஊதியத்தை விட நான்கு மடங்கு குறைவாகும். இதே போல் இவர்களுக்கு பல்வேறு கட்ட பதவி உயர்வும் உண்டு. ஆனால், சத்துணவு ஊழியர்கள் குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட 33 ஆண்டுகளுக்கு பின்பும் பெற முடியாத நிலையே நீடிக்கிறது. இது தொடர்ச்சியான போராட்டங்களுக்கு பின் 33 ஆண்டுகள் சத்துணவு திட்டத்தில் எரியும் அடுப்பில் தன்னையே எரித்துக்கொண்டு பணிபுரிந்து ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ரூ.1500 ஓய்வூதியம் என்பது ஆட்சியாளர்களுக்கு கேலிக்கூத்தாகத் தெரியவில்லையா? அரசுத்துறையில் 30 ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் 16 மாத ஊதியம் கணக்கிடப்பட்டு பணிக்கொடையாக வழங்கும் நிலையில் ஓய்வு பெறும் ஊழியர்க்கு பணிக்கொடை யாக சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.60 ஆயிரமும், சமையலர், உதவியாளர்களுக்கு ரூ.25,000மும், 30.04.2015க்குப் பின் அரசு வழங்கியது. ஜி.பி.எப். திட்டம் சத்துணவு ஊழியர்களுக்கு 1998ல் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு கடந்த 20.07.2015ல் அமல்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் செலுத்தும் தொகை மற்றும் வட்டி மட்டுமே ஓய்வுபெறும்போது வழங்கப்படும். இதில் சத்துணவு ஊழியர்களுக்கு எந்தவித பணப்பயனும் அரசு வழங்காமல் ஏமாற்றுவது என்பதுதான் உண்மை. இத்துறையில் பணிபுரிந்து இறந்து போகும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு முறையாக அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் வாரிசு பணி வழங்காமல் பல ஆண்டுகளாக இழுத்தடிப்பதால் வாரிசுதாரர்களுக்கு பணி பெறும் வாய்ப்பு அரசால் மறுக்கப்படுகிறது. இதே நிலையில் அரசு ஊழியர் வாரிசுகளுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. சத்துணவு ஊழியர்களுக்கு எந்த பணியில் பணியாற்றி இருக்கிறார்களோ, அந்தப் பணி மட்டுமே வழங்குவது மாற்றாந்தாய் மனப்பான்மையே. 33 ஆண்டு காலமாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு, ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம், வரையறுக்கப்பட்ட குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த தொகை ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும்.

காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், கல்வித் தகுதி மற்றும் முன்னுரிமை அடிப் படையில் அனைத்து துறைகளிலும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை அரசு அழைத்து பேசி நிறைவேற்றும் என ஒரு லட்சம் சத்துணவு ஊழியர்களின் குடும்பங்கள் எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். இனியும் பொறுத்துக் கொள்ள சத்துணவு ஊழியர்கள் தயாராக இருந்தாலும் வயது இடம் கொடுக்காது என்பதால் 2017 மார்ச் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மாவட்ட தலைநகரங்களில் பல்லாயிரக்கணக் கானோர் பங்கேற்கும் தொடர் மறியலை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், காலம் தாழ்த்தினால் ஏப்ரல் 25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதென ஈரோட்டில் நடந்த மாநில பேரவையில் முடிவினை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை.  தமிழக முதலமைச்சர் அவர்கள் தலையிட்டு மாநில நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை அரசு அறிவிக்க வேண்டுமென சத்துணவு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஜி.ஆண்டாள், மாநிலத் தலைவர், பே.பேயத்தேவன், மாநில செயலாளர், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்

Leave a Reply

You must be logged in to post a comment.