சென்னை, மார்ச் 19 –
கோவையில் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த பாரூக் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவையில் திராவிடர் விடுதலை கழகத்தைச் சார்ந்த பாரூக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். சிறுபான்மை மதவெறி அமைப்பின் உறுப்பினர்களால் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். மாற்றுக் கருத்துக்களை சொல்வதற்கான உரிமை என்பதே ஜனநாயகத்தில் மிக முக்கியமான கூறு. மதச்சார்பின்மையின் ஆதாரமே கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் யாராக இருப்பினும் அவரவர்களுக்கான உரிமை உத்தரவாதம் செய்யப்படுவதே.

திராவிடர் விடுதலை கழகத்தின் கொள்கைகளில் ஒருவர் உடன்படாமல் இருக்கலாம். அதை எதிர்த்து பிரச்சாரம் செய்வதற்கான உரிமை உண்டு. ஆனால் அந்த கொள்கையை பிரச்சாரம் செய்தார் என்ற காரணத்திற்காக இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இந்த படுகொலையை வன்மையாகக் கண்டிப்பதோடு குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் குடும்பத்திற்கும், திராவிடர் விடுதலைக் கழகத்திற்கும் ஆறுதலையும், இரங்கலையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.