பெற வேண்டிய ஓய்வூதியத்தை வாங்காமல் செல்வதில்லை என்ற முடிவோடு 16ம் தேதி காலையில் துவங்கிய காத்திருப்பு போராட்டத்தை இரவு பகலாக தொடர்ந்து 4வது நாளாக உறுதியோடு நடத்தி வருகின்றனர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பை சேர்ந்தவர்கள்.
அவர்களின் போராட்டப் பந்தலிலும், கையிலும் சங்கத்தின் நீலநிறக் கொடியை உறுதியோடு பற்றிக்கொண்டு உரக்க கோஷமிடுகின்றனர். இது சுதந்திரத்திற்காக வெள்ளையனை எதிர்த்து உயிர்நீத்த கொடிகாத்த குமரனை நினைவூட்டுகிறது. அவன் குமரன். வெள்ளையனை எதிர்த்தான். இவர்கள் வயதானாலும் உறுதியோடு கொள்ளையர்களை எதிர்க்கிறோம் என்கிறார்கள். எங்கள் பணம் ரூ. 6000 கோடியை கொள்ளையடித்தவர்களை எதிர்க்கிறோம் என கூறுகின்றனர்.
குலையாத மனவுறுதி
கடும் நாற்றமெடுத்து தேங்கி நிற்கும் சாக்கடைதான் விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக்கழக தலைமையகம் முன்பு ஆளுபவர்கள் மற்றும் உயரதிகாரிகளைப் போலவே பொய் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. இதிலிருந்து மாலை நேரம் முதல் அடுத்தநாள் காலைவரை கொசுக்கடி தொல்லை. சாக்கடை நாற்றமோ, கொசுத்தொல்லையோ இவர்களின் போராட்ட உறுதியை குலைக்க இயலவில்லை. ஓட்டுநர், நடத்துனராக பணிபுரியும்போது தங்கள் கணவரின் கஷ்டங்களை கேட்டு மட்டுமே இருந்த அவர்களின் இல்லத்துணைவியரும் இரண்டாம் நாள் முதல் போராட்டப் பந்தலுக்கு வந்து அமர்ந்து விட்டனர். இதனால் தமிழக அரசு மற்றும் போக்குவரத்துக் கழக உயரதிகாரிகளின் தகிடுதத்தங்களை தெருக்களில் உள்ள பிற குடும்பத்தினரிடம் அம்பலமாக்கும் பணி தினசரி பரபரப்பாக நடைபெறுகிறது.
குவியும்நிதி
கடந்த காலங்களில் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து பொதுத்துறையாம் போக்குவரத்தை பாதுகாத்து நமக்கு வாழ்வளித்த முன்னோடிகளையும், அவர்களுக்கான இன்றைய கோரிக்கை நாளை நமது முழக்கமென்பதை உணர்ந்து தற்போது பணிபுரியும் தலைமையக ஊழியர்கள், புதுப்பித்தல் பிரிவு தொழிலாளர்கள், பல பணிமனைகளின் தொழிலாளர்கள் என அவர்களாகவே தங்களுக்குள் வசூலித்து பல்லாயிரம் ரூபாய் நிதியை போராட்ட செலவுகளுக்காக தருகின்றனர். இது தினசரி நடைபெறுகிறது. பல சங்கங்களை சேர்ந்தவர்கள் மத்தியிலும் தொழிலாளி வர்க்க உணர்வு வலுப்பட இப்போராட்டம் உந்து சக்தியாக உள்ளது.
உருவாகும் தலைவர்கள்
பணியின்போது அதிகாரிகளின்  பல்வேறு அடக்கு முறைகளுக்கு ஆளானபோது பட்ட அவஸ்தைகளை போராட்டப் பந்தலில் நகைச்சுவையாக வெளிப்படுத்தி சோர்வில்லாமல் பார்த்துக்கொள்கின்றனர் பல தொழிலாளர்கள். ஏற்கனவே சங்கங்களில் சாதாரண உறுப்பினராக இருந்தவர்கள் இங்கே பேச்சாளர்களாக மாறுகின்றனர். அரசின் அலட்சியப் போக்கை அனைவரிடமும் அம்பலப்படுத்துகின்றனர்.
ஓய்வூதியத்தை வழக்கம்போல 1ஆம் தேதியே ஒரேதவணையில் வழங்க வேண்டும், பாக்கியுள்ள பல்வேறு விதமான பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிவரும் இவர்களின் போராட்டத்தை பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆதரித்து உதவிகள் செய்து வருகின்றனர். ஓய்வுபெற்ற பல முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
புறவாசல் வழி அதிகாரிகள்
போராட்ட காலங்கள் முழுவதும் தலைமையகத்திற்கு வரும் அதிகாரிகள் பின்புற வழியிலேயேதான் அலுவலகத்திற்குள் செல்கின்றனர்.
கடலூர் உள்ளிட்ட விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மண்டலங்களை சேர்ந்த ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் பங்கேற்றுள்ள இந்த காத்திருப்பு போராட்டம் பணிபுரியும் பலதுறை தொழிலாளர்கள், ஊழியர்களுக்கான எழுச்சிமிக்க முன்னுதாரணம் என்றால் மிகையல்ல. மேலும் அவமானங்களை சந்திக்கும் முன் தமிழக அதிமுக அரசு இவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றிட வேண்டும்.
-வி.சாமிநாதன்

Leave A Reply