உ.பி. தேர்தலில் அத்தனை இடங்களைப் பிடித்த பாஜக, சட்டமன்றக்குழு தலைவரை முடிவு செய்வதற்கு இத்தனை நாட்களைக் கடத்தியது. தேர்ந்தெடுக்கப்பட்ட 312 உறுப்பினர்கள் இருந்தும், அவர்களில் ஒருவரைக்கூட முதல்வர் பதவிக்குத் தகுதியுள்ளவராக பாஜக தலைமையால் பார்க்க முடியவில்லையா? பிரதமர் வேட்பாளர் என்று நரேந்திர மோடியை முன்வைத்துப் பிரச்சாரம் செய்தவர்களால், இந்த முக்கியமான மாநிலத்தில் இன்னார்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று யாரையும் முன்வைக்க முடியாமல் போனது ஏன்?
இக்கேள்விகளுக்கெல்லாம் ஏற்கத்தக்க பதில் வராது, அது தங்களது உரிமை என்று நழுவு வார்கள் என்றாலும், சட்டமன்றத் தேர்தலில் நிற்காத ஒருவரை, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரை முதல்வராக்கியிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. எல்லாவற்றையும் கட்சியின் மேலிடமே முடிவு செய்யும் என்பது அக்கட்சிக்கு நல்லதுதானா என்று பாஜக ஆதரவுக் கருத்தாளர்கள் கூட கேட்கிறார்கள்.

அதிகாரக்குவிப்பை அடிப்படை யாகக் கொண்ட கட்சியில் இதுவொன்றும் மாறுபட்ட காட்சி அல்ல. ஆனால், பாஜக-வை இயக்குவது ஆர்எஸ்எஸ் பீடம்தான் என்பது இப்போது பல மடங்கு உறுதியாகிறது. இது நாட்டிற்கு நல்லதுதானா என்பதே கேட்கப்பட வேண்டியது. அஜய் சிங் என்ற தனது பூர்வாசிரமப் பெயரைத் துறந்து, காவியுடையுடன் ஒரு சாமியார் போல வலம் வந்தவரான யோகி ஆதித்யநாத், ஒரு துறவியாய் இருந்தவரல்ல. அரசியல் நோக்கங்களுடன் ஐந்து முறை தொடர்ந்து மக்களவைத் தேர்தல்களில் நின்று தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தயக்கமே இல்லாமல் மதவெறிப் பேச்சுகளால் மக்களைப் பிளவு படுத்தும் கருத்துகளைப் பரப்பியவர். முஸ்லிம் களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் எதிரான பகைமை நெருப்பை விசிறிக்கொண்டே இருந்தவர். முஸ்லிம்கள்10 முதல் 20 சதவீதம் வரையில் இருக்கிற பகுதிகளில் வகுப்பு மோதல்கள் நடக்கின்றன, 35 சதவீதத்திற்கு மேல் உள்ள பகுதிகளில் முஸ்லிம் அல்லாதவர் களுக்கு இடமே இருக்காது என்றும், அன்னை தெரசாவுக்கு நோபல் விருது அளிக்கப்பட்டி ருந்தாலும், அவர் இந்தியாவை கிறிஸ்துவமய மாக்க முயன்றவர்தான் என்றும் பேசியது ஆதித்யநாத்தின் மதப்பகைமை வன்மங்களுக்கு உதாரணங்களாகும்.

நாடாளுமன்றம் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்,
முஸ்லிம் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரக்கூடியவர்களுக்கு டொனால்டு டிரம்ப் விதிக்கும் தடைக்கு ஆதரவளிப்பவர் என்றபின்னணிகளும் இவருக்கு உண்டு. தனது தலைமையில் ‘இந்து யுவ வாஹினி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி மதவெறியை பரப்புகிறவர். அந்த அமைப்பின் மீதும் அவர் மீதும் கொலை, கலவரங்கள் உட்பட பல்வேறு கிரிமினல் வழக்குகள் இருப்பது தற்செயலானதல்ல. நரேந்திர மோடியின் மூலம் குஜராத்தை மதவெறி அரசியலுக்கான சோதனைக் கூடமாக்கியது போன்றதொரு முன்னோட்டத்தை ஆர்.எஸ்.எஸ். இப்போது உ.பி. மாநிலத்தில் அரங்கேற்றுகிறது. இந்தியா வின் மதச்சார்பின்மைக் கோட்பாட்டையும் ஜனநாயகப் பாதையையும் பன்முகப் பண்பாட்டுத் தளங்களையும் பாதுகாக்க விரும்புவோருக்கு மிகப்பெரிய சவால் எதிர்நோக்கியிருக்கிறது.

Leave A Reply