வேலூர்,
விளைநிலங்கள் வழியாக  குழாய் பதித்து எரிவாயுவை எடுத்துச் செல்லும் திட்டத்தை கைவிட வேண்டுமென மாவட்ட குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். இதற்கு  ஆட்சியர் பதிலளிக்கையில், விவசாயிகள் விரும்பினால் எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், வேளாண் இணை இயக்குநர் சுப்புலட்சுமி, கூட்டுறவுத் துறை இணை இயக்குநர் திருகுணஐயப்பதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை. மேலும் அனைத்து விவசாயிகளுக்கும் இதுவரையில் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை. கடந்த 2012-13ஆம் ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தியும் இதுவரையில் நிவாரணம் வழங்கப்படவில்லை. தற்போது தென்னை பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுமா எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஆட்சியர் ராமன்,  50 சதவீத பாதிப்புக்கு உள்ளான பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. பயிரிட முடியாத தரிசு நிலங்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது என மத்திய அரசு கூறி விட்டது என்று தெரிவித்தார்.
தென்னை பாதிப்பு குறித்து கணக்கெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் ஏப்ரலில் இந்தப் பணி தொடங்கும்.

விவசாயிகள்: சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களை ஈடுபடுத்தினால் 25 சதவீதப் பணிகளை முடித்து விட முடியும் என்பதால் அவர்களை ஈடுபடுத்துவதோடு, விவசாயப் பணிகளுக்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாயிகளுக்குத் தெரியாமல் விளைநிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய் எடுத்துச் செல்ல அவர்களது நிலத்தில் கல் நடப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக மக்களிடம் அச்சம் நிலவுகிறது. விளைநிலங்களை கையகப்படுத்தும் இத்திட்டத்தை கைவிட்டு, சாலையோரமாக எடுத்துச் செல்லலாம் என்றனர்.

ஆட்சியர்: எதற்காக கல் நடப்பட்டது என்பது ஆரம்பத்தில் யாருக்கும் தெரியவில்லை. சென்னையிலிருந்து பெங்களூரில் உள்ள தொழிற்சாலைகளுக்குத் தேவையான எரிவாயு, குழாய் வழியாக எடுத்துச் செல்லப்பட இருக்கிறது. தொழிற்சாலைகள் நிறைந்த வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டை பகுதியில் உள்ள சில தொழிற்சாலைகள் கேட்டதன் பேரில் நேராக செல்லவுள்ள குழாயிலிருந்து இணைப்பு மூலம் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது என்றார்.

பயப்படும் அளவுக்கு அபாயகரமான பாதிப்பு இல்லை. இத்திட்டத்தில் 1.5 மீட்டர் ஆழத்தில் குழாய்கள் பதிக்கப்படும் என்பதால் சாகுபடி செய்து கொள்ள முடியும். இதற்காக விவசாயிகளுக்கு நான்கு மடங்கு இழப்பீடு அளிக்கப்பட இருக்கிறது. எரிவாயுக் குழாய் புதைக்கப்பட்டுள்ள பகுதிகளில் கட்டடம், ஆழ்துளைக் கிணறு, மரங்கள் மட்டும் நட முடியாது. விவசாயிகள் விரும்பினால் எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Leave A Reply