கடலூர்,
உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநிலக் காடு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் உள்ளது. இந்தக் காடுகள் ஆழிஅலைகளை தாங்கி அந்த பகுதியில் வாழும் மக்களையும், உயிரினங்களையும் காத்து வருபவை. இந்தக் காடுகளில் எண்ணற்ற தாவரவகைகள்,நூற்றுக்கணக்கான பறவையினம் உள்ளிட்ட நுண்ணுயிரிகள் வாழ்ந்து வருகின்றன. இயற்கையின் சிறப்புக் கொடையாகிய இந்தக் காடு கடந்த சில ஆண்டுகளாக அழிவை நோக்கி செல்கிறது.

இதற்கான ஒரு முக்கியக் காரணம் இந்தக் காடுகளை சுற்றி அனுமதி பெற்றும்,பெறாமலும் நூற்றுக்கணக்கான செயல்படும் இறால் பண்ணைகள். இறால் பண்ணைகளில் இருந்து வெளியேற்றபடும் கழிவுநீரை இந்தக் காடுகளில் பாய்ச்சி விடுகின்றனர். இதனால் இந்த மாங்குரோவ் காடுகளை சுற்றியுள்ள கிள்ளை, பிள்ளுமேடு, சின்னவாய்கால், சுற்றுலாபிச்சாவரம், வடக்கு பிச்சாவரம், தெற்குபிச்சாவரம், குச்சிபாளையம், ராதாவிளாகம், டிஎஸ்.பேட்டை, நஞ்சமகத்துவாழ்கை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடிநீர் கடுமையாக பாதிக்கப்பட்டு  உப்பு நீர் உள்ளே புகுந்துவிட்டது.

நிலத்தடிநீர் உப்பு நீராக மாறியுள்ளதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் கருகி அழியும் அபாயத்தை நோக்கிச் சென்றுகொண்டிக்கின்றன. இது குறித்து பலமுறை சம்பந்தபட்ட வனத்துறையினரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் கூறுகின்றனர்.

கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு தலைமையில் ஒன்றிணைந்து கிள்ளையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம்,தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மாதவன், துணைத்தலைவர் கற்பனைச்செல்வம்,  ராஜாராமன், கான்சாகிப் பாசனவிவசாயிகள் சங்க தலைவர் சையதுசாகாப், விவசாயிகள், பாதிக்கப்பட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கட்சி வித்தியாசம் இல்லாமல் கலந்துகொண்டனர்.

அனைவரும் இறால் குட்டைகளால்தான்  நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டு குடிநீர் உப்பாக மாறியுள்ளது என்றனர். இதனை அரசு உடனடியாக தடைசெய்யவேண்டும். இல்லையென்றால் வாடிவாசல் போல் இங்கேயும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று ஆவேசத்துடன் பேசினார்கள்.

இதுகுறித்து  ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு கூறுகையில், “இந்தப் பகுதியில் இறால் பண்ணைகள் புற்றீசல்கள் போல் துவங்கப்பட்டுள்ளன. மூடி வைக்கப்பட்ட குட்டைகள் சட்டத்தை ஏமாற்றி நிலத்தடிநீரை உறிஞ்சுகிறது. அனுமதி பெற்ற,பெறாத குட்டைகள் அதன் கழிவுகளை மாங்குரோவ்காடுகளில் விடுகிறது. இதனால் இயற்கை வளம் அழிகிறது.

எனவே இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்போம் தடுக்கவில்லையென்றால் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாடிவாசல் போல் பாதிக்கப்பட்ட கிராமமக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மிகபெரிய போராட்டத்தை நடத்ததிட்டமிட்டுள்ளோம்” என்றார்.

Leave A Reply