லக்னோ, மார்ச் 18 –
நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச மாநில முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமையன்று நடைபெற்ற உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், ஆதித்யநாத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக பாஜக தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்யநாத், ரஜபுத்திர பிரிவைச் சேர்ந்தவர். கோரக்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து, 5 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அஜய்சிங் என்ற தன்னுடைய இயற்பெயரை யோகி ஆதித்யநாத் என்று மாற்றிக்கொண்டு, சாமியாராக வலம் வரும் இவர், பிற சமயத்தவருக்கு எதிராக தொடர்ந்து வெறிப்பேச்சுகளை பேசி வருபவர்.
2005ம் ஆண்டில், கிறிஸ்தவர்களை இந்துக்களாக மதம் மாற்றப் போவதாக அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர்.
காசி விஸ்வநாதர் ஆலயத்தை தரிசிக்க செல்லும்போதெல்லாம் கியான்வாபி மசூதி எரிச்சல் அடைய வைக்கிறது; அனுமதி கிடைத்தால் ஒவ்வொரு மசூதியிலும் விநாயகர், கௌரி மற்றும் நந்தி சிலைகளை வைப்பேன்; என்றும் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவது நிச்சயம் என்று பேசியவர்.
சூரிய நமஸ்காரம் யோகா மற்றும் சூரிய நமஸ்காரத்தை எதிர்ப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்; சூரிய கடவுளுக்கு நமஸ்காரம் செய்ய மறுப்பவர்கள் கடலில் மூழ்க வேண்டும் அல்லது இருட்டு அறைக்குள் போய் ஒளிந்து கொள்ள வேண்டும் என்றவரும் இவர்தான்.
இந்துத்துவத்தின் அடையாளம் பசு; எனவே, பசுவையே பாரத மாதாவாக அறிவிக்க வேண்டும். நாடு முழுவதும் மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஒருமுறை பேசினார்.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பாஜக எம்.பி.க்களுக்கு அக்கட்சியின் கொறடா ஒருமுறை உத்தரவிட்டபோது, அதை ஏற்க முடியாது என்று கொறடா உத்தரவையும் மீறியவர் ஆதித்யநாத்.
இவரைத்தான் தற்போது உத்தரபிரதேச முதல்வராக பாஜக அறிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 312 தொகுதிகளில் வென்றது. ஆனால், அந்த 312 எல்எல்ஏ-க்களில் ஒருவரைக் கூட முதல்வராக தேர்ந்தெடுக்காத பாஜக, தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவரை, அதுவும் வெறித்தனமான சாமியாரை உத்தரபிரதேசத்தின் முதல்வராக பாஜக கொண்டு வந்துள்ளது.
ஆதித்யநாத், ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: