திருவள்ளூர்,
தலித் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் ரேசன் கடைகளை திறக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் ரேசன் கடைகளில் சமையல் எண்ணெய்,  பருப்பு ஆகியவற்றை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியும் ஆதார் எண் இணைப்பு இல்லாத குடும்ப அட்டைகளுக்கு ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்காததைக் கண்டித்தும் மார்ச் 18 அன்று திருவள்ளூர் பஜாரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.கீதா செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, மாவட்டச் செயலாளர் இ.மோகனா, வட்ட நிர்வாகிகள் மகேஷ்வரி, கலா, சாந்தி உட்பட பலர் பேசினர்.இதில் மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலண்டினா பேசுகையில், கடந்த ஆறு மாதங்களாக அரிசி, சர்க்கரையை தவிர வேறு எந்த பொருளும் வழங்கப்படவில்லை.திருவள்ளூர் மாவட்டத்தில் திருவூர், பெரிய எடப்பாளையம், சோழவரம், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, மீஞ்சூர், ஆரணி உட்பட பல ஊர்களில் உள்ள ரேசன் கடைகளில் கள ஆய்வுகள் மேற்கொண்டோம். அப்போது எங்கும் நவீன மின்னணு எடை இயந்திரத்தின் மூலம் பொருட்கள் வழங்குவதில்லை. இதனால் பொருட்கள் எடை குறைவாக உள்ளது.

ரேசன் கடைகள் எல்லாம் உயர் சாதியினர் வசிக்கும் இடத்தில் உள்ளதால் தலித் மக்கள் அங்கு சென்று பொருட்கள் வாங்குவதில் பல பிரச்சனைகள் உள்ளன.எனவே தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் பகுதிநேர ரேசன் கடைகளையாவது திறக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

Leave A Reply