திருவள்ளூர்,
மாநில மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகளை,பராமரிக்கும் பணிகளை  தனியாரிடம் ஒப்படைத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும்  என்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டப் பேரவை  மார்ச் 18 அன்று திருவள்ளூர் வட்டாட்சியர் வளாகத்தில் மாவட்ட அமைப்பாளர் ஆர்.ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட அமைப்புச் செயலாளர் கே.மோகன்தாஸ் வரவேற்றார். பொருளாளர் எம். மணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பி.கோதண்டபாணி துவக்கிவைத்துப்பேசினார்.துணை நிர்வாகிகள் எம். சீனிவாசன், ஏ.ரவி, வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க மாவட்டத்  தலைவர் ஆர்.பாண்டுரங்கன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோ.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் ஜே.வி.அருள்டேனியேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மா.பாலசுப்பிரமணியன் முடித்து வைத்துப்பேசினார். உட்கோட்டத் தலைவர் கோதண்டன் நன்றி கூறினார்.

புதிய நிர்வாகிகள்

சங்கத்தின் மாவட்டத் தலைவராக ஆர்.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளராக கே.மோகன்தாஸ், பொருளாளராக ஜி.அகஸ்டின், மாவட்டத் துணைத் தலைவராக ஏ.ரவி, மாவட்ட துணைச் செயலாளராக என்.ஜஸ்டின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,சாலை பணியாளர்களுக்கு காலணி, மண்வெட்டி,சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும், பணியாளர்களுக்கு ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும், போக்குவரத்துக்கான பயணப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல  தீர்மானங்கள்  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply