காஞ்சிபுரம்,
கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த  உத்தரவை மதிக்காமல் காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை விநாயகபுரம் கீழாண்டை தெரு (ரேசன்கடை அருகில்) மற்றும் மேலாண்டை  தெருவில் வீடுகளில் வைத்து மதுபானங்கள் விற்கப்பட்டன.

இது குறித்து அப்பகுதி மக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் காவல்துறைக்கு  தகவல் தெரிவித்தனர். உடனே காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து பறந்து வந்த காவலர்கள் மக்களை சமாதானப்படுத்துவதில் குறியாக இருந்தனர். சட்டவிரோதமான மதுபானங்களை விற்றவரை கைது செய்தாலும் அவர் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். ஆனால், மது விற்பனையை எதிர்த்துப் போராடிய பொதுமக்கள் 14 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய முயற்சித்து வருகிறது.

இதுகுறித்து காவல்துறையில் கேட்டபோது சாலையில் போக்குவரத்தை மறித்து போராட்டம் நடத்தியதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள். போராடுகின்ற மக்களை ஒடுக்கி, சமூக விரோதிகளுக்கு ஆதரவான நிலையை காவல்துறை கடைபிடிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave A Reply