காஞ்சிபுரம்,
இடுகாட்டிற்கு செல்லும் பாதையில்  சூழ்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றாமலேயே புகார் மனு கொடுத்தவருக்கு பணி முடித்துவிட்டதாக கடிதம் அனுப்பிய காஞ்சிபுரம் பெருநகராட்சி நிர்வாகம் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட  நத்தப்பேட்டை பகுதியில்  இடுகாட்டிற்கு செல்லும் வழியில் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் உள்ளன. அவற்றை  அகற்றவேண்டும் என்று நகராட்சி, 41வது வார்டு நத்தப்பேட்டையில்  வசிக்கும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் நேரு கடந்த ஜனவரி மாதம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் செய்தார். அதற்கு பெருநகராட்சி நிர்வாகம் அளித்த பதில் கடிதத்தில், காஞ்சிபுரம் நகராட்சியில்  நத்தப்பேட்டை பகுதியில் இடுகாட்டுக்கு செல்லும் வழியில் உள்ள சீமைக்கருவேல மரங்கள், முட்புதர்கள், முள் மரங்கள் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில்  ஜே.சி.பி வாகனத்தின் மூலம் வேரோடு அகற்றப்பட்டு விட்டன. தற்போது அப்பகுதி சுத்தமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

உண்மையில் அந்த இடத்தில் சீமைக்கருவேல மரங்கள்  அகற்றப்படாமல் அப்படியே உள்ளன.எனவே பொய்யான தகவல் கொடுத்த நகராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி  தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், அப்பகுதி மக்களும் கோரியுள்ளனர்.புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் பொய்யான தகவல்  அளித்த  அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து பெருநகராட்சி ஆணையரிடம் கேட்டபோது பணிகள் விரைவில் நடைபெறும் என்பற்கு பதிலாக பணிகள் முடிந்துவிட்டதாக தவறாக கடிதம்  அனுப்பப்பட்டுவிட்டது. விரைவில் பணிகள் நடைபெற்று சீமைக்கருவேலமரங்கள் அகற்றப்படும் என்றார்.

Leave A Reply