காஞ்சிபுரம்,
நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து காலி செய்யப்படும் டாஸ்மாக் கடைகள் கிராமங்களை நோக்கி படையெடுப்பதால் கிராமப் பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழக அரசால் நடத்தப்பட்டுவரும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட  டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் தேசிய மற்றும், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ளது.

இதனால் அதிக அளவில் விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்படுவதால்  மார்ச் 31ம் தேதிக்குள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்றவேண்டும் என்று  உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்து. இந்த கடைகளை முற்றிலுமாக மூடுவதற்கு பதிலாக மதுபானக் கடைகளை நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள கிராமங்களுக்குள்  அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.  அதற்கான இடங்களை தேர்வு செய்து நிலத்தின் உரிமையாளர்களிடம் கட்டிடத்தை கட்டித்தரவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு கிராமத்தில் உள்ள பெண்களும் பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டத்திற்குட்பட்ட முகுந்தகிரி ஊராட்சியில் மதுராபுதூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் எல்லையையடுத்த பழவூர் கிராம எல்லையில்  டாஸ்மாக் மதுபானக் கடைக்காக  கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இதற்கு  அப்பகுதி பெண்கள் மற்றும் வாலிபர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வெள்ளியன்று (மார்ச் 17) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.புருசோத்தமன் தலைமையில்  மனு அளித்தனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை  கிராமத்திற்குள் அமைப்பதற்கு பெண்கள் மற்றும் பொதுமக்ள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.

Leave A Reply