சிதம்பரம்,
 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்துவரும்  பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் அனைவருக்கும் கல்வித் தகுதி சரியாக உள்ளதா என ஆய்வு செய்ய தமிழக அரசு உத்திரவிட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இதில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் இளங்கலை படிக்காமல் திறந்த வெளி பல்கலைக்கழகம் மூலம் நேரடியாக முதுகலைப்பட்டப்படிப்பு முடித்ததாக சான்றுபெற்ற 20க்கும் மேற்பட்டவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள எம்பிஏ. மற்றும் தமிழ்த் துறை, சமூகவியல் துறை, நூலகத்துறை உள்பட பல துறைகளில் உதவிப் பேராசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு எதிராகப் பணி நியமனம் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாம்.

பல்கலைக்கழக நிர்வாகம் சம்பந்தப்பட்ட பேராசிரியர்களிடம் உரிய விளக்கக் கடிதம் கேட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழகத்தில் நேரடியாக திறந்த வெளி பல்கலைக்கழகம் மூலம் முதுநிலைப் பட்டபடிப்பு படித்து பல்கலைக்கழகத்தில் தற்போது பணிபுரிந்து வரும் பேராசிரியர்கள் , உதவிப் பேராசிரியர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதே போல் (எம்பிஏ) மேலாண்மைத் துறையில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று முதல் நிலை எடுக்காமல் 60 சதவீதத்துக்கு குறைவாக மதிப்பெண்கள் எடுத்து உதவிப் பேராசிரியர்களாக மானியக்குழு விதிகளுக்கு எதிராக தற்போது பணியாற்றி வருவதாகக் கூறப்படும் 48 பேர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பல்கலைகழக சிண்டிகேட் கூட்டம் வரும் 28ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. இதில் பணி நிரவல், சம்பளக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர், ஊழியர்களுக்கு தொடர்ந்து மாதா மாதம் சம்பளம் போட முடியாத நிலை ஏற்பட்டதையொட்டி அரசின் வழிகாட்டலின் படி பல்கலைக்கழக நிர்வாகம் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: