தில்லி ,

பி.ஆர்.அம்பேத்கரின் 125 ஆவது பிறந்த நாளை ஒட்டி தலித் மக்கள் நலனுக்காக பல திட்டங்களை அறிவித்தார் பிரதமர் மோடி. ஆனால் அவரது அரசோ சமூக பாகுபாடு பற்றிய ஆய்வு மையங்களுக்கான நிதியை நிறுத்தியுள்ளது. இதுவே மோடி அரசின் வாக்கும் , செயல்பாடுகளும் வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் ஒன்று என்பதை நிரூபிக்கும் மற்றொரு சான்று.

நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில்  சமூக பாகுபாடு பற்றிய ஆய்வு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையங்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (யுஜிசி) நிதி அளித்துவருகிறது.

இந்நிலையில் 11வது ஐந்தாண்டு திட்டதில் கீழ் நிறுவப்பட்ட நிலையங்கள் (2007-2012) மற்றும் 12வது ஐந்தாண்டு திட்டதின் கீழ் புதுப்பிக்கப்பட்ட சமூக பாகுபாடு பற்றிய ஆய்வு மையங்களுக்கு நிதியை நிறுத்தப் போவதாக யுஜிசி தெரிவித்துள்ளது. 13வது திட்டத்தின் மூலம் மீண்டும் இத்திட்டம் நீட்டிக்கப்படும் என பல்கலைக்கழகங்கள் எதிர்பார்த்த நிலையில் , வரும் மார்ச் 31 முதல் இந்த நிதி நிறுத்தப்படும் என யுஜிசி சில பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

திட்டமிட்டு வரவு செலவு செய்யும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கான சமூக பாகுபாடு ஆராய்ச்சி நிலையங்கள் , மற்றும் இதர ஆராய்ச்சி நிலையங்கள் உள்ள நிலையில் அந்த அறிவிப்பு பல்கலைக்கழகங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக யுஜிசி துணைச் செயலாளர் சுஷ்மா ராத்தூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவுப்படி , 12வது திட்ட காலம் முடிவடைந்த பின் , சமூக பாகுபாடு ஆராய்ச்சி நிலையங்களுக்கான நிதியை யூஜிசி இனி மேல் வழங்காது. 12வது திட்ட காலம் முடிவடைந்த பின்னர் சமூக விலக்கல் மற்றும் உள்ளீடான திட்டங்களுக்கு யுஜிசி எந்த வகையிலும் பொறுப்பேற்காது. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் ஊக்குவிக்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்.

ஆனால் யுஜிசி மற்றும் அமைச்சகமோ , பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்டு சமூக பாகுபாடு பற்றிய ஆராய்ச்சி நிலையங்களை மேம்படுத்தாத நிலையங்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என கூறுகிறது.

வேத ஆய்வுகள் குறித்த படிப்புகளுக்கு யுஜிசி நிதி அளிக்க ஆரம்பித்தது. அதன் பின்னர் படிப்படியாக  தலித் , அம்பேத்கரின் தத்துவம் , இட ஒதுக்கீடு போன்ற சமூக பாகுபாடு பற்றிய ஆராய்ச்சி படிப்புக்களுக்கு நிதிகளை யுஜிசி நிறுத்து விட்டது என தில்லி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் ஆசிரியரும் , அம்பேத்கர் அறிஞருமான சுகுமார் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக , தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள சமூக பாகுபாடு பற்றிய ஆய்வு மையமும் மூடப்படுகிறது. இதையடுத்து இந்த துறையில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் வேறு துறைக்கு மாற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த துறையில் இருக்கும் சிரியர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

Leave A Reply