திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நகரில் குடிநீர்த்தட்டுப்பாடு நிரந்தர பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்கு முடிவுகட்ட நிரந்தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் நகரக்குழு பேரூராட்சி நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளது.

இது பற்றி நகர செயலாளர் சி.டி.ஜோசப் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, டெல்டா மாவட்டங்களின் தஞ்சை, திருவாரூர் கும்பகோணம், மன்னார்குடி போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் வருவாய் வட்ட தலைநகரான நீடாங்கலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நகரில் மத்திய மாநில அரசு அலுவலகங்கள்,தனியார் மற்றும் அரசு பள்ளிகள்,தேசீயமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன .ரயில் சந்திப்பு நிலையமும் உள்ளது. இந்த பேரூராட்சியில் மூன்று குடிநீர் மேல்நிலை நீர்த்தொட்டிகள் உள்ளன. இதில் நீடாமங்கலம் அரசினர் மருத்துவமனை மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டி மின் மோட்டார் பல வருடங்களாகவே அவ்வப்போது பழுதடைவதும் பேரூராட்சி நிர்வாகம் அதனை சீர் செய்து ஓட்டுவதும் வாடிக்கையாகவுள்ளது.

குறிப்பாக கோடை காலங்களில் குடிநீருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அவதிப்படும் நிலைவுள்ளது. குடிநீர் எங்கே கிடைக்கும் என பெண்கள் காலிக்குடங்களுடன் குறிப்பாக மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் அலைவதை சர்வசாதாரணமாக பார்க்கமுடியும். வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள இந்த மேல்நிலை தொட்டி அதிக மக்கட்தொகை கொண்ட வார்டுகள் 4,5,6,7 மற்றும் அரசு மருத்துவமனை, வருவாய்துறை அலுவலகங்கள் போன்ற தேவைஅதிகம் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் மேல்நிலை தொட்டியாகும். இதன் ஆழ்குழாய் கிணறு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 175 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டது.

இப்போது கைவிடப்படவேண்டிய கிணறாகும். எனவே ஒரு புதிய ஆழ்குழாய் கிணறு இம்மேல் நிலை தொட்டிக்கு அருகில் அமைக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும். ஆனால் இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் கடந்த காலங்களில் உரிய கவனம் செலுத்தவில்லை என்பதுதான் வேதனையான உண்மையாகும். நிலத்தடி நீர் மட்டமும் வெகுவேகமாக குறைந்து வரும் நிலையில் எதிர்வரும் கடுங்கோடையை சமாளிப்பதற்கு 400 அடிக்கு குறையாமல் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க போர்கால அடிப்படையில்பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு சி.டி. ஜோசப் தெரிவித்துள்ளார்.

Leave A Reply