நாக்பூர் பல்கலைக்கழகம் ஒன்றில் சீத்தாராம் யெச்சூரி பேச இருந்த கூட்டம்  துணை வேந்தரின் திடீர் அறிவிப்பால் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது..
நாக்பூரில் உள்ள ரா.ஷ்ட்ரகந்த் துக்காதோஜி மகாராஜ் பல்கலைக்கழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி  18ஆம்தேதி (சனிக்கிழமையன்று) பேசுவதாக இருந்தது. ‘’ஜனநாயகமும் அதன் மாண்புகளும்” என்கிற தலைப்பில் அவர் உரை நிகழ்த்துவதாக இருந்தது. இப்பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் சிந்தனைகள் துறை சார்பில் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் இப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திடீரென்று இக்கூட்டத்தை “காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக” அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அம்பேத்கர் சிந்தனைகள் துறையின் தலைவரான பிரதீப் அக்லாவே தி இந்து செய்தியாளரிடம். “நாங்கள் இது தொடர்பாக துணை வேந்தரை சந்தித்தோம். இந்தக் கூட்டம் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது. சில அமைப்புகள் அவரை அழைத்து, இதற்கு எதிராகக் கிளர்ச்சி செய்வோம் என்று அவரை அச்சுறுத்தியதாகத் தெரிவித்தார். ஆனால் எந்த அமைப்பு அச்சுறுத்தியது என்று அவர் தெரிவித்திடவில்லை. எனினும்  அந்த அமைப்பு ஏபிவிபி என்பது தெளிவான ஒன்று”  என்று கூறினார்.
இது குறித்து தி இந்து செய்தியாளர் துணைவேந்தரிடம் விசாரித்தபோது, அவர், “இந்தக்கூட்டம் ரத்து செய்யப்படவில்லை. மாறாக  சில நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இப்பிரச்சனை தொடர்பாக இதற்குமேல் பேச விரும்பவில்லை” என்று கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான  நிடின் ரவுத், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் தூதுக்குழுவினருடன் துணைவேந்தரை சந்தித்து,”நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாதீர்கள் ” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் அவர், “நாங்கள் துணை வேந்தரை சந்தித்தபோது அவர் மிகவும் அழுத்தத்துடன் காணப்பட்டார். நிலைமையை எங்களிடம் விளக்கிக் கூறும் அளவுக்கு அவர் இல்லை. யெச்சூரியை அழைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று அவர் கூறினார். ஏபிவிபியின் நிர்ப்பந்தம் இதன் பின்னே இருக்கிறது என்பது தெளிவு. யெச்சூரி ஒரு பயங்கரவாதி அல்ல. அவர்  நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த பல ஆண்டுகளாக சேவை செய்துகொண்டிருக்கிறார். அவர் ஓர் அறிவுஜீவி என்றும் அறியப்பட்டவர். அவரது பேச்சை எதிர்ப்பது என்பது நிச்சயமாக நேர்மையற்ற ஒன்று,” என்றார்.
(ந.நி.)

Leave A Reply