வேலூர்,
வேலூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் 28-ஆவது வார்டுக்கு உள்பட்ட சைதாப்பேட்டை பகுதியில் மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சைதாப்பேட்டை மெயின் பஜார் சாலையில் மாநகராட்சி கோடையிடி பள்ளி முன், மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மூலம் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.

Leave A Reply