சிதம்பரம்,
கடலூர் மாவட்டத்தில் கிராமங்களுக்குச் செல்லும் அரசு பேருந்துகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்துக்கு உட்பட்ட கடலூர் மண்டலத்துக்கு  கீழ் இயங்கும் அனைத்துக் கிளை பணிமனைகளில் இருந்து கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் மறைமுகமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் , டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை  கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பலவிதங்களில் பாதிப்படைந்துள்ளனர்.இந்நிலையில்  கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் மறைமுகமாக அரசு அறிவிப்பு இல்லாமலேயே ஒரு ரூபாய் வரை பேருந்துக்  கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அரசுப்பேருந்துகளில் குறைந்தப்பட்ச கட்டணமாக  ரூ. 3 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது நான்கு ரூபாய் கட்டணம் ரத்து செய்யப்பட்டதாக அரசுப் பேருந்தின் நடத்துநர்கள் பயணிகளிடம் தெரிவித்து ஐந்து ரூபாய் கட்டணத்திற்கான  டிக்கெட்டை தருகிறார்கள். இதை சற்றும் எதிர்பாராத பயணிகள் நடத்துநர்க ளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். அதிகாரிகள் எங்களை இந்தக் கட்டணத்தை வாங்க உத்தரவிட்டுள்ளார்கள் என்று கூறி டிக்கெட் வாங்கி கொள்ளுங்கள் அல்லது இறங்கிக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். இது போன்ற  நிலைதான் தற்போது கிராமத்துக்கு செல்லும்  அரசுப்பேருந்துகளில்  உள்ளது.  இந்த திடீர் கட்டண உயர்வால் கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் கூறும்போது, “தமிழக அரசு பேருந்துக் கட்டணம் உயர்வைப்பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. பணிமனையில் இருக்கும் அதிகாரிகள் தங்கள் விருப்பம் போல்  பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். கிராமப்புறங்களில் வறட்சி உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நேரத்தில் இது போன்ற மறைமுக பேருந்துக் கட்டணங்களால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இது மிகவும் வன்மை யாகக் கண்டிக்கதக்கது. அரசு இதற்கு ஒரு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றார்.

Leave A Reply