தருமபுரியை சேர்ந்த தலித் இளைஞர் இளவரசனின் மரணம் நிச்சயமாக தற்கொலை அல்ல என்பதை நிரூபிக்க தேவையான அனைத்து ஆதாரங்களும் உள்ளது என தடயவியல் மருத்துவ துறையின் தலைவர் மற்றும் சென்னை ஸ்ரீ ராமசந்திரா மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை முதல்வர் மருத்துவர் சம்பத் குமார் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த தலித் இளைஞர் இளவரசன் செல்லங்கோட்டை பகுதியில் வசிக்கும் வன்னியர் பிரிவை சேர்ந்த திவ்யா ஆகிய இருவரும் காதலித்து சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2013 ஆம் ஆண்டு மிக பெரிய சாதி கலவரம் நடந்தது. இந்நிலையில் இளவரசன் தருமபுரி ரயில் நிலையம் அருகே அடிபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இளவரசனின் மரணம் தற்கொலை அல்ல திவ்யாவின் உறவினர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இளவரசனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில் தடயவியல் மருத்துவ துறையின் தலைவர் மற்றும் சென்னை ஸ்ரீ ராமசந்திரா மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை முதல்வர் மருத்துவர் சம்பத் குமார் இளவரசனின் மரணம் நிச்சயமாக தற்கொலை அல்ல என நிரூபிக்க தேவையான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

நாட்டின் முன்னணி தடயவியல் நிபுணரான மருத்துவர் சம்பத் குமார் , 1991 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தவர். கடந்த ஜூலை 2015 சேலம் தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு , உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் கொலை , விழுப்புரம் கல்லூரி மாணவிகள் 3 பேர் மரணம் போன்ற முக்கிய சம்பவங்களை தனது 26 வருட அனுபவத்தில் கையாண்டவர் . கடந்த 2013 ஜூலை 11ம் தேதி இளவரசின் உடலை ஆய்வு செய்யவும் அழைக்கப்பட்டார். அழைப்பை ஏற்று இளவரசனின் உடலை ஆய்வு செய்து அதன் அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் , குற்ற புலனாய்வுத் துறைக்கும் தாக்கல் செய்தார்.

கடந்த பிப்.21 குற்ற புலனாய்வுத் துறை சமர்ப்பித்த அறிக்கைப்படி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஹுலுவாடி ஜி. ரமேஷ் மற்றும் ஆர். மாதனவன் அடங்கிய அமர்வு , இளவரசனின் மரணம் தற்கொலை தான் என தீர்ப்பளித்தனர்.

இது குறித்து தமிழ்நாடு காவல்துறையினர் , திவ்யாவிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்ட இளவரசன் கடந்த 2013 ஜூலை 4 ஆம் தேதி மதியம் 1.20 மணியளவில் தருமபுரி ரயில்நிலையம் அருகே கோயமுத்தூர் – குர்லா விரைவு ரயிலின் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்துள்ளனர்.

இளவரசனின் உடலை , தருமபுரி மருத்துவ கல்லூரி தலைமை மருத்துவர் தண்டர் தலைமையில் 3 மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதற்கான காணொளியை ஆய்வு செய்து மேலும் 3 மருத்துவர்கள் அறிக்கை அளித்தனர்.

இதை தொடர்ந்து சென்னை ஸ்ரீ ராமசந்திரா மருத்துவ கல்லூரியில் இருத்து மருத்துவர் சம்பத் குமார் மற்றும் காஞ்சிபுரம் எஸ்.ஆர்.எம். பல்கலைகழகத்தை சேர்ந்த மருத்துவர் தங்கராஜ் ஆகிய இருவரும் இளவரசனின் உடலை இரண்டாவது முறையாக பிரேத பரிசோதனை செய்தனர். இவர்களின் ஆய்வறிக்கையில் வேறுபாடு இருந்ததால் , சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின் படி தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர்மீண்டும் இளவரசனின் உடலை பிரேத பரிசோதனை செய்து அறிக்கை 2013 ஜூலை 13ம் தேதி தாக்கல் செய்தனர். ஆக மொத்தம் இளவரசனின் மரணம் தொடர்பாக 12 மருத்துவர்கள் தங்களது ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.

தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் , சம்பவம் நடந்த அன்று இளவரசன் மது அருந்தியுள்ளார். தற்கொலை செய்து கொள்ள முயன்ற போது , தற்செயலாக ஓடும் ரயிலின் முன் விழுந்து அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டு , அவர் மரணமடைந்தார். விசாரணையில் சூழ்நிலை ஆதாரங்களை வைத்து இதுமேலும் உறுதி செய்யதுகொள்ளலாம் என தெரிவித்திருந்தனர். இதை வைத்து தான் இளவரசின் மரணம் தற்கொலை தான் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் தடயவியல் நிபுணர் சம்பத் குமார் கூறுகையில் , இளவரசனின் மரணம் தற்கொலை அல்ல கொலை தான் என்பதை நிரூபிக்க அனைத்து அறிவியல் ஆதாரமும் உள்ளது. அவரது உடலில் இருந்த காயங்களுக்கும் , அவர் ரயிலின் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற கதைக்கும் சிறிதும் சம்பந்தமில்லை. முக்கியமாக இளவரசனின் உடலில் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெளி காயங்கள் இருந்தது. ஒன்று அவரது தலையில் இடது புறத்திலும் , மற்றொன்று அவரது இடப்புற முழங்கையிலும் . ரயில் எந்த திசையில் இருந்து வந்திருந்தாலும் கூட , அவர் தண்டவாளத்தின் ஓரத்தில் நின்றிருந்தாலும் , தோல்பட்டை உட்பட அவரது வலதுகரம் முற்றிலுமாக அடிபட்டிருக்கும். ஆனால் அவர் தோள்பட்டையில் எந்த காயமும் இல்லை. ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற அறிக்கைக்கு ஏற்றவாறு அவரது முதுகெலும்பில் முறிவுகளோ அல்லது நசுங்கப்படவோ இல்லை. அவர் மீது ரயில் மோதியிருந்தால் கண்டிப்பாக அவர் வெகு தூரம் தூக்கி வீசப்பட்டிருப்பார். ஆனால் அவரது உடலோ தண்டவாளத்தில் இருந்து வெறும் 1.7 மீட்டர் தொலைவிலே இருந்தது. ரயில் பாலத்தில் விழுந்து அடிபட்டதற்கான ஆதாரங்களோ அல்லது ரயில் இருந்து கீழே விழுந்ததற்கான காயங்களோ அவர் உடலில் இல்லை. அவர் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தாலும் அவர் தலை முற்றிலுமாக நசுங்கப்பட்டிருக்கும். அவருக்கு ஏற்பட்டிருந்த காயங்கள் ஆலமானது அல்ல. அவரை யாரோ தாக்க வரும் போது , அதை அவர் தனது வலது கையில் தடுத்ததாலேயே கையில் அடிபட்டுள்ளது. அறிக்கையின் படி அவரது மூலையில் 81மி.கி மது இருந்தாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் 300மி.கி வரை ஒருவரால் சாதாரணமாக இருக்க முடியும் .

தில்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கையில் முக்கியமாக , இளவரசனின் மார்பு பகுதியில் இருபக்கங்கள் , வலது கையில் கீழ்ப்புறம் , வலப்புற புற விரலிலும் கிரீஸ் கறைகள் இருந்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் முதல் முறையாக இளவரசனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போதும் அதன் பின்னர் ஐந்து மருத்துவர்கள் ஆய்வு செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இல்லாத கிரீஸ் கறைகள் தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆய்வு செய்யும் போது மட்டும் எப்படி வந்தன ? ஜூலை 13ம் தேதி எய்ம்ஸ் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கிரீஸ் கறைகள் மிக தெளிவாக தெரிகிறது.

இளவரசனின் உடல் கைப்பற்றப்பட்ட 24 மணி நேரத்தில் , அவரது உடல் இருந்த இடம் முற்றிலுமாக சுண்ணாம்பு அடிக்கப்பட்டது. அங்கிருந்த சரளை கற்கள் முற்றிலுமாக மாற்றப்பட்டன. எனக்கு அளிக்கப்பட்ட புகைப்படத்தில் அவரது சட்டையில் எந்த கறைகளும் இல்லாமல் மிக தூய்மையான வெள்ளை நிறத்தில் தான் இருந்தது. இது தொடர்பாக நான் விசாரணை நடத்த சொன்ன போது , இளவரசனின் சட்டை , கை கடிகாரம் , காலணி என எதுவும் கிடைக்கவில்லை என்ற பதிலே எனக்கு வந்தது. மருத்துவர் தண்டர் ஆய்வு செய்த போது  இளவரசனின் சட்டை ரயில்வே காவலர்களிடம் ஒப்படைத்துவிட்டார் என பதில் வந்தது. ரயில்வே காவலர்களிடம் கேட்ட போது , சட்டை அப்பகுதி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என கூறினர். காவலர்களிடம் கேட்ட போது ரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என கூறினர். பின்னர் இளவரசனின் கைக்கடிகார புகைப்படத்தை மட்டுமே எனக்கு காட்டினர்.

நீதிபதி சிங்காரவேலுவை சந்தித்து இதை பற்றி கூறினேன். அவர் எனது அறிக்கைகளை பதிவு செய்து கொண்டார். இளவரசனின் மரணம் கொலை என்பதை நிரூபிக்க முடியாவிட்டாலும் , அவர் நிச்சயமாக தற்கொலை செய்யவில்லை , இது ரயில் விபத்தும் இல்லை என்பதை நிரூபிக்க அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன.

இளவரசன் மரணமடைந்த போது தருமபுரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த அஸ்ரா கார்க் தற்போது இது குறித்து , இந்த சம்பவம் நடந்த நான்கு ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. மேலும் இந்த வழக்கு புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டு விட்டது. இது தொடர்பான அனைத்து கேள்விகளுக்கான பதிலும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விவரங்கள் வேண்டும் எனில் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களிடம் தான் கேட்க வேண்டும். மருத்துவர்கள் , காவலர்கள் , புலனாய்வு துறையினர் அளித்த அறிக்கைகளை வைத்து உயர் நீதிமன்றம் இது தற்கொலை தான், மேலும் விசாரணை நடத்த வேண்டாம் என கூறி வழக்கை முடித்து விட்டனர் என கூறியுள்ளார்.

நன்றி: https://thewire.in

தமிழாக்கம் – ஆர்.சரண்யா.

Leave A Reply