காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ளது மேல்மருவத்தூர் கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமாக இம் மாவட்டத்தில் பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒன்று ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி. இக் கல்லூரியில் தமிழகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இங்கு மாணவர்கள் அடிக்கடி தற்கொலை செய்து கொள்வதும் அவை யாருக்கும் தெரியாமல் மூடிமறைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இக்கல்லூரியில் 4 ஆம் ஆண்டு கெமிக்கல் என்ஜினியரிங் படித்து வந்த திருநெல்வேலி மாவட்டம் சிவசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த மாணவர் விஜய் என்பவர் கல்லூரியல் நடக்கும் சீர்கேடுகள் குறித்து முகநூலில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்தப்பதிவில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஏதேனும் தவறு செய்தால் “அப்பா’’ திரைப்படத்தில் காட்டுவதைப் போன்று இருட்டு அறையில் துணிகளை அவிழ்த்து அடிப்பதாகவும், மாணவிகளையும் அதுபோன்றே நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார். கல்லூரியின் தாளாளரும் பங்காரு அடிகளார் மகனுமான செந்தில்குமார் மாணவர்கள் மீது கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தி வருவதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் செல்லும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரையும் காவல்துறையினர் பணம் பெற்றுக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்ய கல்லூரியின் தாளாளர் செந்தில்குமாரிடமே அழைத்துச் செல்வதால் காவல் துறைக்கும் செல்ல முடியாமல் பலர் குமுறிக்கொண்டிருப்பதாகவும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்களன்று முகநூலில் பதிவிட்டதற்காக மாணவன் விஜயை கல்லூரியின் தாளாளர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தைச் சார்ந்த சக்திக்கண்ணன், வழக்கறிஞர் ஜெயமணி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கல்லூரி வகுப்பறையில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். கல்லூரி குறித்து தவறாக பேசுபவர்களுக்கு இதுதான் நிலை என்றும் மாணவர்கள் முன்பே பகிரங்கமாக சொல்லி அடித்துள்ளனர்.அதன் பின்னரும் ஆத்திரம் நிற்காமல் இருட்டு அறைக்கு அழைத்துச் சென்று விஜயை காலை முதல் மாலை வரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து மேல்மருவத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் புகாரை மேல்மருவத்தூர் காவலர்கள் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாணவன் விஜய் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவன் விஜயின் தாயார் பஞ்சவர்ணம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் கல்லூரி தாளாளர் செந்தில் குமார், மற்றும் சக்திகண்ணன் வழக்கறிஞர் ஜெயமணி உள்ளிட்ட பத்துபேர் மீது மருவத்தூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, காயங்கள் ஏற்படும் வகையில் தாக்குதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து மேல்மருவத்தூர் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் கல்லூரி நிர்வாகத்திற்கும் கோவில் நிர்வாகத்திற்கும் ஆதரவாகவே காவல்நிலையத்தினர் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை பங்காரு அடிகளார் குடும்பத்தினர் அளிப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும் மேல்மருவத்தூர் காவல் நிலையம் கோவில் நிர்வாகத்திற்குட்டபட்ட இடத்தில் செயல்பட்டுவருவதால் பொதுமக்கள் புகார் கொடுக்க செல்வதற்கே அஞ்சும் நிலை உள்ளது.

ஆதிபராசக்தி கோவில் மற்றும் கல்லூரி நிர்வாகம் அருகில் உள்ள அரசு இடங்களை ஆக்கிரமிப்பதும் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதும் தொடர்கிறது. இதுகுறித்து கிராம மக்கள் மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் முறையிட்டால் காவலர்கள் உதவியுடன் கோவில் நிர்வாகத்தின் சார்பில் குண்டர்களை வைத்து அடித்து விரட்டுகிறார்கள். எனவே கிராம மக்களையும் அரசு நிலத்தையும் பாதுகாக்கவும் மாணவர்களை குறிப்பாக மாணவிகளை பாதுகாக்கவும் தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு கல்லூரி நிர்வாகத்தை எச்சரிக்கவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேல்மருவத்தூர் காவல் நிலையத்தை ஆதிபராசக்தி கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட இடத்தில் இருந்து பொதுவான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

Leave A Reply