தமிழக பட்ஜெட் 2017 – 2018 சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் அவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

பட்ஜெட் அறிவிப்புகளின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:]

11.20 AM: ரூ.150 கோடி செலவில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி: அமைச்சர் ஜெயக்குமார்

கோவை, திருச்சி, மதுரையில் ரூ.150 கோடி செலவில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

11.15 AM: உள்ளாட்சித் தேர்தல் நடத்த ரூ.174 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு

11.10 AM: குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.615 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

நிதி ஒதுக்கீட்டின் 4 முக்கிய அம்சங்கள்:

* நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.13,996 கோடி ஒதுக்கீடு

* காவல்துறையினர் வீட்டு வசதிக்கு ரூ. 450 கோடி ஒதுக்கீடு:

* விவசாய பயிர்க் கடன்களுக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு

* மின்சாரம்- எரிசக்தித் துறைக்கு ரூ.16,998 கோடி ஒதுக்கீடு

11.00 AM: 2018-ல் தமிழக அரசின் கடன் சுமை ரூ.3,16,366 கோடியாக இருக்கும்: நிதியமைச்சர் ஜெயக்குமார்

10.55 AM: நடப்பு நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9% ஆக இருக்கும் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

நிதி ஒதுக்கீட்டின் சில முக்கிய அம்சங்கள்:

* கால்நடை பராமரிப்பிற்கு ரூ.1,161 கோடி நிதி ஒதுக்கீடு

* திருமண உதவித் திட்டங்களுக்கு ரூ.723 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு

* விவசாய பயிர்க் கடன்களுக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு

* வருவாய் பற்றாக்குறை ரூ.15,931 கோடி என மதிப்பீடு

10.45 AM: தமிழகத்தில் ரூ.13,14,366 கோடி கடன் உள்ளது என்றும், 2017-18-ம் ஆண்டுக்கான நிதி பற்றாக்குறை ரூ. 41,977 கோடி என்றும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

10.40 AM: நிதியமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.

10.39 AM: எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்குப் பிறகு சபாநாயகர் நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

10.36 AM: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசினார் அமைச்சர் ஜெயக்குமார். அதற்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, துணை பொதுச் செயலாளர் தினகரனுக்கு நன்றி தெரிவித்தார். அதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேர்தல் ஆணையம் பரிசீலனையில் இருப்பதால் பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளருக்கு நன்றி தெரிவித்தது தவறில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

10.34 AM: தமிழக சட்டப்பேரவையில் முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் ஜெயக்குமார்.

10.32 AM: திருக்குறளைப் படித்து பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைத்தார் சபாநாயகர் தனபால்.

10.30 AM: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

10.20 AM: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை

10.03 AM: சட்டப்பேரவைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை

10.00 AM: சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வருகை. பேரவைக்குள் நுழைந்த போது பாதுகாப்பு அதிகாரிகளின் பெயரைக் கேட்ட ஸ்டாலின், அதை துண்டுச்சீட்டில் குறித்துக் கொண்டார்.

9.55 AM: முதல்வர் பழனிசாமி மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

9.45 AM: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வருகை தந்தனர்.

9.15 AM: தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை கிளம்பிய நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்றார். அங்கு நிதிநிலை அறிக்கை அடங்கிய பெட்டியை ஜெயலலிதாவின் சமாதியில் வைத்து வணங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடும் நிதி நெருக்கடியிலும் மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் பட்ஜெட் அமையும்” என்றார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் அமைச்சர் டி. ஜெயக்குமார்: படம்- எல்.சீனிவாசன்.

பட்ஜெட் கூட்டத் தொடருக்காக தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. எடப்பாடி பழனிசாமி அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்கிறார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவிலும் ஆட்சியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. சசிகலாவின் தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியதால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களுக்கிடையே கடந்த பிப்ரவரி 16-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. அதன்பின் பிப்ரவரி 18-ல் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றது.

ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். புதிய அரசு பொறுப்பேற்றதும் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்தன. முதல்வரிடம் இருந்த நிதித்துறை, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. 2017-18-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், காலை 10.30 மணிக்கு பேரவையில் தாக்கல் செய்கிறார். இது எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் நிதியமைச்சர் ஜெயக்குமாருக்கும் முதல் பட்ஜெட் ஆகும்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். அதனடிப்படையில், இந்த அரசும் புதிய அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

source :  தி தமிழ் இந்து

Leave A Reply