மதுரை,
மதுரை மாவட்டம் பாலமேடு, 66 பி.மேட்டுப்பட்டி அருகே உள்ள உசிலம்பட்டி கிராமத்தில் பெருமாள் மலை (பூலாமலை) உள்ளது . இந்த மலையில் கல் குவாரி அமைக்க அரசு ஏலம் விட்டுள்ளது. ஏலம் எடுத்து குவாரி அமைப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

கல்குவாரி அமைத்தால் விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறி, கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் பெருமாள் மலை
மீது ஏறி செவ்வாயன்று  போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனையடுத்து புதனன்று மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ்  போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் குவாரி ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அவர் உறுதி அளித்துள்ளதை தொடர்ந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கூறியதாவது: சில மாதங்களுக்கு குவாரி அமைக்க டெண்டர் விட்டதாக கேள்விப் பட்டதும், 6 கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து 50 மனுக்கள் தயார் செய்து குவாரி அமைத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து கூறியிருந்தோம். அப்போது ஆர்டிஓ நடவடிக்கையின் பெயரில் இனி குவாரி அமைக்க மாட்டோம் என உறுதி அளித்தனர்.

தற்போது மீண்டும் ஏலம் எடுத்ததாகக் கூறி குவாரி அமைக்க ஏற்பாடுகள் நடைபெறுவதால் போராட்டம் நடத்தினோம். இந்த குவாரி அமைப்பதால் சுற்றுவட்டார கிராமங்களான சேந்தமங்கலம், 66 மேட்டுப்பட்டி, உசிலம்பட்டி, பள்ளப்பட்டி, ஆலாம்பட்டி, பொந்துகம்பட்டி ஆகிய கிராமங்கள் மட்டுமல்லாமல், சுற்றுவட்டார கிராமங்களும் பாதிக்கப்படுகின்றன. ஏற்கனவே இந்த பகுதியில் 3 குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த குவாரிகளில் வெடி வைப்பதில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக உசிலம்பட்டி பள்ளி சுவர் 2 முறை விரிசல் ஏற்பட்டு, சீரமைத்துள்ளனர்.

வெடி வைப்பதற்கு, அளவுக்கு அதிகமாக 100 அடிக்கும் மேல் ஆழமான போர் போட்டு, அதில் 10 பெட்டிக்கு மேல் வெடிமருந்துகளை வைக்கின்றனர். இதனால் 6 கிலோமீட்டரிலிருந்து 7 கிலோமீட்டர் வரை நிலநடுக்கம் வந்ததுபோல் வெடிச்சத்தம் கேட்கும். பல வீடுகளில் ஓடு உடைந்து விழுவதும் சுவரில் விரிசல் ஏற்படுவதுமாக உள்ளது, வெடி வெடித்தவுடன் இந்த பகுதி முழுவதுமே புகை மண்டலமாக தெரியும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றோம். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படு கின்றனர். நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. விவசாயம் முற்றிலும் பாதிப்படைந் துள்ளது. கல்குவாரியிலிருந்து வெளியாகும் தூசியால் கொய்யா, மா, பப்பாளி விளைச்சல் வெகுவாகக் குறைத்துவிட்டன. பெருமாள்மலை யில் உள்ள குவாரியில் ஆபத்தான நிலையில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

பெருமாள்மலை குவாரியாலும் மழையில்லாததாலும் பெரும் துயரத்தை அனுபவித்து வருகிறோம். குவாரிகளால் இப்பகுதிகளில் மாடுகளுக்குக் குடிப்பதற்குக் கூடத் தண்ணீர் இல்லை. மாடுகளுக்காக ஒரு குடம் தண்ணீரை ரூ. 5-க்கு விலை கொடுத்து வாங்குகிறோம். 400அடிக்கு மேல் போர் போட்டாலும் தண்ணீர் வருவ தில்லை. மேலும் குவாரிகளால் மலைகளில் இருந்த வன விலங்குகள், மயில்
போன்றவைகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டன. வெடி வைத்ததால் அவைகளுக்கும் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு அழிந்துவிட்டது.

இந்த நிலையில் மேலும் ஒரு குவாரிக்கு அனுமதி வழங்கி உள்ளனர். குவாரி அமைக்கக் கூடாது என போராட்டத்தில் ஈடுப்பட்டோம்.  பின்னர் மாவட்ட ஆட்சியர் வந்து, குவாரி அமைக்கப்படாது என உறுதி அளித்துள்ளதை தொடர்ந்து போராட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

(ந.நி.)

Leave A Reply