மதுரை: மதுரையில் செல்போனுக்காக பிளஸ் 2 மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலையாளிகள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மகால் 9-ஆவது தெருவைச் சேர்ந்த குமரேஷ்பாபு-கிரிஜா தம்பதியின் மகன் நாகராஜ். இவர், புனித மேரி பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.  நாகராஜ் திங்களன்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் நாகராஜ் வழிமறைத்து அவரிடம் செல்போனை கேட்டுள்ளனர். அப்போது  நாகராஜ் செல்போனை தர மறுக்கவே அந்த கும்பல் கத்தியால் அவரை குத்திவிட்டு செல்போனை பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் மயக்கமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் வியாழனன்று செய்தியாளர்களை சந்தித்த மதுரை மாநகர காவல் ஆணையர் சைலேஷ் குமார் கொலையாளிகள் அனைவரும் உள்ளூர்காரர்கள் தான் என்றும் அதில் ஒருவர் 10ம் வகுப்பு படித்து வருகின்றார் எனவும், அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply