திருவண்ணாமலை,
மேல்ராவந்தவாடி கிராமத்தை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் வனரோஜா கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுத்தார். ஆனால், தத்தெடுத்த நாளிலிருந்து இதுநாள்வரை எந்த விதமான அடிப்படை வசதிகளையும் அவர் செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் வனரோஜாவின் சொந்த ஊரான நீப்பத்துறை கிராமத்திற்க்கு செல்லும் வழியில் தான் மேல் ராவந்தவாடி கிராமம் உள்ளது. இக்கிராம மக்கள்  தண்ணீர் தேடி அலைவதை கண்டுகொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர் வனரோஜாவின் செயலால்  ஆவேசமடைந்த  கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் பலனாக அதிகாரிகள் பொது மக்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தங்களது சொந்த செலவில் வனப்பகுதி ஓரமாக வெட்டப்பட்ட கிணற்றிலிருந்து தங்கள் பகுதிக்கு தண்ணீர் கொண்டுவர பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல், இருந்துவருவதாக வும், அதற்கு காரணம் கேட்டால் வனத்துறையினர் அனுமதி கொடுக்க மறுப்பதால் தான் மாவட்ட நிர்வாகமும் அனுமதி தர மறுக்கிறது என்று அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால்  மனமுடைந்த அப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அதிகாரிகளின் கண்முன்னே மேல் நிலை நீர்த்தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு பொதுமக்களிடம் பேசிய அதிகாரிகள் பொதுக்கிணற்றிலிருந்து  பைப்லைன் இணைக்கும் வரை, டேங்கர் லாரியின் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதாக உறுதியளித்தனர்.  இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Leave A Reply