புதுக்கோட்டை, மார்ச்15-
ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார்கொல்லையில் 28-வது நாளாகவும், வடகாட்டில் 11-வது நாளாகவும் தொடர்ந்து புதனன்றும் விவசாயிகள் நாற்றுநட்டும், தூக்குமாட்டியும் நூதன வடிவங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடகாட்டில் புதனன்று நடைபெற்ற போராட்டத்தில், சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து மா, பலா, வாழை, நிலக்கடலை உட்பட்ட விளைபொருட்களையும், கறுப்புக் கொடியை ஏந்தியும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் மற்றும் மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பிக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நல்லாண்டார்கொல்லையில் 28-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில், பெண்கள் ஒப்பாரி வைத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் நல்லாண்டார்கொல்லையில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறு அருகே நாற்றுப்பயிர்களை நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் விவசாயி கள் ஆழ்துளைக் கிணற்றின் மேல் உள்ள உருளையில் கயிறு கட்டி தூக்குப் போடும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.  நாட்கள் செல்லச் செல்ல போராட்டம் படிப்படியாக நீர்த்துவிடும் என்று நம்பியிருந்த ஆட்சியாளர்களுக்கும், காவல் துறையினருக்கும் வீரியமடைந்துவரும் போராட்டக்களம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

Leave A Reply