மதுரை,மார்ச் 15-
மதுரை மாவட்டம் தோப்பூரில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம் சார்பில் புதனன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தென்மாவட்ட மக்கள் உயர்தர மருத்துவ சிகிச்சைக்காக சென்னை, கோயம்புத்தூர், வேலூர், திருவனந்தபுரம் போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கத் தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மதுரையில் உள்ளன. மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய முன்மொழியப்பட்ட இடமானது நான்கு வழிச்சாலையில் இருந்து மிக அருகில் உள்ளது. தென்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் மதுரைக்குவரமுடியும். எனவே அதிநவீன மருத்துவ சிகிச்சை அளிக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க வேண்டும் என்று தென்மாவட்ட மக்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தென்மாவட்டங்களின் தலைநகரமாக விளங்கும் மதுரையில் மருத்துவக் கல்லூரியுடன் கூடிய எய்ம்ஸ் அதிநவீன மருத்துவமனையை தோப்பூரில் அமைக்க வேண்டும். இதனால் தென்மாவட்ட மக்கள் பெரிதும் பயனடைவார்கள். எனவே இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் பொ.மோகன் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்கக் கோரி தொடர்ந்து குரல் எழுப்பினார். இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம் சார்பில் புதனன்று உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது.

பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் தலைமை வகித்தார். மடீசியா தலைவர் முராரி முன்னிலை வகித்தார். முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தொடங்கிவைத்துப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.ஜோதிராம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.நன்மாறன், இரா.அண்ணாதுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.கணேசன் ஆகியோர் ஆதரித்துப் பேசினர். போராட்டத்தில் அனைத்துக் கட்சியினர், வர்த்தகர் சங்கத்தினர், சிறுவியாபாரிகள் சங்கத்தினர், தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தோர் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

(ந.நி.)

Leave A Reply