இம்பால் ,

மணிப்பூர் மாநில சட்டபேரவை தேர்தலில் பாஜக அறுதிபெரும்பான்மை பெறாத நிலையில், ஆளுநரை பயன்படுத்தி குறுக்கு வழியில் பாஜக முதல்வர் பதவியை கைப்பற்றியிருக்கிறது. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைக்காமல், குறைவான இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவை அம்மாநில ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தார். அதன் படி பாஜகவை சேர்ந்த பிரேன்சிங் மணிப்பூர் மாநில முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.

மணிப்பூரில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 தொகுதிகளிலும் , பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.  இதன் மூலம் காங்கிரஸ அதிக இடங்களை கைப்பற்றி முதலிடத்தை பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் பாஜக தனது அதிகாரத்தை பயன்படுத்தி கடுமையான குதிரை பேரத்தில் ஈடுபட்டது. மேலும் அதன் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அதற்கு ஏதுவாக மணிப்பூர் ஆளுநர் காங்கிரஸ் முதல்வரை விரைந்து ராஜனாமா செய்ய வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் அம்மாநில முதல்வர் இபோபி சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அதிக இடங்களை கைப்பற்றிய தங்களையே ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால் ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா ராஜனாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். இதையடுத்து பாஜக சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிரேன் சிங் இன்று அம்மாநில முதலமைச்சராக பதவியேற்றார். அம்மாநில துணை முதல்வராக என்பிபி கட்சியின் ஒய்.ஜாய்குமார் பதவியேற்றார். ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா இவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  பதவியேற்பு விழாவில் பாஜகவின் மூத்த தலைவர்களான பிரகாஷ் ஜவடேகர் , ராம் மாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.