ஜி.மம்தா
சர்வதேச மகளிர் தினத்திற்குத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்த அனேகம் பேருக்கு நன்றி கூறிட வேண்டும். உண்மையில் அவர்களது பெயர்ப் பட்டியல் மிக நீண்டதாகும். எனினும், காலம் மற்றும் இச்செய்திக்கான இடம் ஆகியவற்றின் அருமையைக் கருத்தில் கொண்டு, எக்காரணம் கொண்டும் குறிப்பிடாமல் விட்டு விடக் கூடாத ஒரு சிலபேரைப் பற்றி மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.
முதல் நன்றி… முதன்மைச் சேவகருக்கு!
பிரதமரிலிருந்தே.. மன்னிக்கவும், ‘‘முதன்மைச் சேவகரிடமிருந்தே’’ நாம் துவக்கிடுவோம். 140 எழுத்துக்களைக் கொண்ட டிவிட்டர் ஹேண்டிலைப் பயன்படுத்துவதில் தனது வலிமையைக் காட்டிட கொஞ்சமும் கூச்சம் கொள்ளாத அவர், ‘‘பெண் சக்தியின் எவருக்கும் அடிபணியாத மனநிலை, மனஉறுதி, அர்ப்பணிப்புணர்வு ஆகிய குணநலன்களை சர்வதேச மகளிர் தினத்தன்று’’ போற்றுவதாக ‘டிவீஷ்’ (அதுதாங்க டிவீட்+விஷ்) செய்தார்.
எவருக்கும் அடிபணியாத மனநிலை… ஆம், உண்மையிலேயே அதற்காக நமக்கு அவருக்கு நன்றியைத் தெரிவித்திட வேண்டும்.
யாருக்கும் அடிபணியாத மனநிலை என்றால் என்ன என்பதனை மத்தியப்பிரதேச மாநிலத்தின் போபால் நகருக்கு அருகேயுள்ள பத்ஜிரி எனும் குக்கிராமத்தைச் சார்ந்த பெண்கள் காட்டியுள்ளனர். மத்தியப்பிரதேச மாநிலத்தின் முதல் ‘ரொக்கமில்லா’ கிராமம் பத்ஜிரி ஆகும். அக்கிராமத்தைச் சார்ந்த பெண்கள் பிரதமருக்கு நன்றி சொல்வதற்கான காரணங்கள் பலவற்றில் முக்கியமான காரணம் இதுவேயாகும்.
மற்ற இடங்களைப் போலவே, இக்கிராமத்தைச் சார்ந்த பெண்களும் தங்களது வேலையிலும், குடும்பத்தின் மீதும் அதிகமான பற்றும், அர்ப்பணிப்புணர்வும் கொண்டவர்களாகவே இருந்தனர். அதன் காரணமாக, எவருக்கும் அடிபணியாத மனநிலையோடு (திரும்பத் திரும்ப இந்த வார்த்தையை பயன்படுத்திடுவதற்கு மன்னித்திடுங்கள்) அவர்கள் தங்களது வேலையை செய்ததுடன் மட்டுமின்றி, தங்களது சொற்ப வருமானத்திலிருந்து கொஞ்சம் தொகையை சேமிக்கவும் செய்தனர். அக்குடும்பத்தைச் சார்ந்த ஆணுக்கும் கூட எவ்வித சந்தேகமும் எழாதவாறு இத்தகைய சேமிப்பெல்லாம் இயல்பாகவே மிகப் பாதுகாப்பான சிறு பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. இதனைச் சொல்கிறபோது, இப்பெண்களுக்கு வங்கிக் கணக்குகள் எதுவும் இருக்கவில்லை என்பதனைச் சொல்ல வேண்டியதில்லை. நமது முதன்மைச் சேவகரின் நவம்பர் 8-ம் தேதிய நடவடிக்கையால், இந்த ஆண்டு மார்ச் 8 அன்று இப்பெண்கள் இவருக்கு நன்றி தெரிவித்திட விரும்புகின்றனர். தனது ஒற்றை நடவடிக்கையால் இப்பெண்கள் அரும்பாடுபட்டுச் சேர்த்திருந்த சேமிப்புகளை எல்லாம் காணாமல் போகச் செய்துவிட்டார். இத்தகைய சேமிப்புகள் பற்றி வேறுவழியேதுமின்றி அக்குடும்பத்தின் ஆண்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு சில வீடுகளில், மிருகத்தனமான குடும்ப வன்முறைக்கும் அப்பெண்கள் ஆளாகிட நேர்ந்தது. பாராட்டத்தக்க மனவுறுதியோடு … ‘பெண்சக்தியை’ வெளிப்படுத்தி இதையெல்லாம் அப்பெண்கள் தாங்கிக் கொண்டனர்.
இப்படி ஒரு நடவடிக்கையைப் பிரதமர் மேற்கொள்ளாதிருந்தால், பெண்களிடையே இருக்கின்ற இத்தகைய குணநலன்களை நாம் எவ்வாறு அறிந்து கொள்ள முடிந்திருக்கும்.
எனவே, தனது சிறப்புமிக்க பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் வாயிலாக, பெண்களின் இத்தகைய குணநலன்களை நமது கவனத்திற்கு கொண்டு வந்ததற்காக, பிரதமரே, உங்களுக்கு எமது நன்றிகள். பெண்களை உண்மையிலேயே ரொக்கமில்லாதவர்களாக ஆக்கியிருக்கிறீர்கள் நீங்கள்.
பத்ஜிரிகிராமமானது, ‘ரொக்கமில்லா’ கிராமம் மட்டுமல்ல. தற்போது குடிநீரில்லாத கிராமமும்கூட.
நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியே எடுத்திட ஆழ்குழாய் கிணறுகளை அமைத்திடத் தேவையான பணம் இக்கிராமவாசிகளிடம் இல்லை. எனவே, இவர்கள் தண்ணீரை வாங்குவதற்காக மாதந்தோறும் 600 முதல் 800 ரூபாய் வரை செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். தங்களது விளைநிலங்களில் ஆழ்குழாய் கிணறுகளை ஏற்கனவே ஏற்படுத்தியிருக்கிற சில விவசாயிகள், தற்போது மரங்களின் மீதும், கம்பங்களின் மீதும் குழாய்களைப் பொருத்தி தங்களது வயலிலிருந்து வீட்டிற்கு நீரை கொண்டு செல்கின்றனர்.
வீட்டு உபயோகத்திற்குத் தேவையான தண்ணீர் இருப்பதனை உத்தரவாதம் செய்திடும் பொறுப்பு அக்குடும்பத்தின் பெண்கள் மீதே விழுகின்றது. அப்பெண்கள்தான் தண்ணீரைச் சுமந்திட மிக நீண்ட தொலைவு நடக்கின்றனர். தற்போதைய நிலை இவ்வாறு இருக்கையில், வெயில் காலம் உண்மையிலேயே துவங்கிய பின்னர் நிலைமை எவ்வாறு இருக்கும் எனக் கற்பனை செய்து பாருங்கள். தற்போது இக்கிராமம் தேக்கநிலையில் இருக்கிறது. தண்ணீரை வாங்கிடத் தேவையான பணம் அவர்களிடம் இல்லை. தண்ணீர் இல்லாமல் அவர்களால் நல்ல விளைச்சலை எடுக்க இயலாது. எனவே, தண்ணீர் இல்லாததால் அவர்களிடம் பணமும் இருக்காது.
இவை எல்லாவற்றிற்கும், எவருக்கும் அடிபணியாத குணத்துடன், அவர்கள் நன்றி கூறிட விரும்புகிறார்கள்.. யாருக்கு எனத் தெரியுமா உங்களுக்கு.. நன்றி பிரதமர் அவர்களே… எங்களை ரொக்கமில்லாதவர்களாக, எங்களது கிராமங்களை தண்ணீர் இல்லாதவைகளாக, அதன் வாயிலாக எங்களது வீடுகளை உணவில்லாதவையாக மாற்றியதற்காக, உங்களுக்கு எங்களது நன்றிகள்.. பெண்கள் தின வாழ்த்துக்கள்…
இரண்டாம் நன்றி… இவருக்குத்தான்!
அடுத்து நாம் நன்றி சொல்ல வேண்டியது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு. அதாவது, மேனகா காந்திக்கு!
‘‘நீங்கள் 16 அல்லது 17 வயதினராக இருக்கும்போது, நீங்கள் ஹார்மோன்களின் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே, உங்களது சொந்த ஹார்மோன்களின் மாற்றங்களிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளவே லக்ஷ்மணக் கோடு கிழிக்கப்படுகிறது. உண்மையில், இது உங்களது சொந்தப் பாதுகாப்பிற்காகவே” என அவர் திருவாய் மலர்ந்துள்ளார்.
பாதுகாப்பு, பாலின சமத்துவம் போன்ற பிரச்சனைகளுக்கு காலவரையறையை திணிப்பதன் மூலம் தீர்வு காண இவர் விரும்புகிறார். ‘‘பாலின சமத்துவத்திற்காக’’ முன்னின்று போராடுகின்ற இவர், ஆண்களுக்கும், பெண்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்கிறார். “ஆண், பெண் இருபாலருக்கும் ஒரேமாதிரியான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியிருக்கும்… 6 மணிக்குப் பிறகு கல்லூரி வளாகத்தினுள் சுற்றித் திரிந்திட மாணவர்கள் ஏன் அனுமதிக்கப்பட வேண்டும்? அவர்களும் கூட தங்களது அறைகளுக்குள்ளேயே இருந்து, அவர்களது வேலைகளை செய்திடட்டும்” என்கிறார். பாதுகாப்பிற்காக கட்டுப்பாடுகளை விதித்திடுங்கள்.. வீட்டிற்குள்ளே அவர்களை அடைத்து வைத்திடுங்கள் – இதுதான் பாலின சமத்துவம் குறித்த இவரது கண்ணோட்டம் ஆகும்.
இவரது பெயருக்குப் பின்னால் உள்ள குடும்பப் பெயரின் சொந்தக்காரராக இருப்பவர் (காந்தி) பாவம்.. அவர் அழுது தீர்த்திட வேண்டும்.. அவர்தானே, என்றைக்கு பெண்கள் நள்ளிரவில் கழுத்து நிறைய தங்க நகைகளுடன் தெருவில் நடக்க முடிகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் இந்தியாவிற்கு கிடைக்கும் என்று கூறினார்…! ஐயா, காலம் மாறிவிட்டது. ஐயோ பாவம், 20-ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் வசித்த மனிதர் நீங்கள். இப்போது நாங்களோ, 21ம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆண்களும், பெண்களும் தனித்தனியாகப் பிரிந்திடுகிறோம், மாலை 6 மணிக்குப் பிறகு தற்போது நாங்கள் வீட்டினுள் அடைந்திடுகிறோம். ஹார்மோன்கள் ஐயா.. ஹார்மோன்கள் ..யார் உதவி செய்திட இயலும்? ஆண்கள் பலசாலிகள், பெண்கள் பலவீனமானவர்கள்; வெளியில் சென்று வேலை பார்க்க வேண்டியவர்கள் ஆண்கள், வீட்டு வேலையை செய்ய வேண்டியவர்கள் பெண்கள் … இந்த ‘‘மாண்புகளை’’ இச்சமூகம் படிப்பிக்கிறது. இதில் எந்தத் தவறும் இல்லை. சொல்லப் போனால், பெண்கள் அனுபவிக்கத் தகுந்தவர்கள். திரைப்படத்தின் ‘கவர்ச்சிப் பாடல்களில்’ வரும் ‘கவர்ச்சி நாயகிகள்’ அல்லவா அவர்கள்.. ஆம்.. கவர்ச்சிப்பொருட்கள், நுகர்பொருட்கள் எல்லாமே பெண்கள்தானே. அவர்களை விலை கொடுத்து வாங்கிடலாம், நையப் புடைத்திடலாம், பயன்படுத்திவிட்டு தூக்கித் தூர எறிந்து விடலாம். இவை எல்லாவற்றிற்கும் நமது ஹார்மோன்களே காரணமாகும். வேறு எதுவுமில்லை. எங்களது கண்களை திறந்தமைக்காக, அமைச்சர் பெருந்தகையே, உமக்கு எமது நன்றிகள்… மகளிர் தின வாழ்த்துக்கள்.
கழிசடைகளின் எஜமானருக்கும் நன்றி!
அடுத்து, நமது நாட்டின் தென்பகுதியை நோக்கி நகர்ந்திடுவோம், மாற்றத்திற்குக் கட்டியம் கூறுபவரை, சிறந்தவை எல்லாவற்றையும் உருவாக்கிடுபவரை சந்தித்திடுவோம். அவர் வேறு யாருமல்ல.. நமது ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர்தான் அவர்.
‘‘பெண்மையின் குணநலன்கள், அவர்களது வலிமை, பொறுமை, துணிச்சல் மற்றும் உற்சாகம்’’ ஆகியனவற்றை வணங்கி வாழ்த்துக்களை இவரும் டிவீஷ் செய்திருக்கிறார்.
நிச்சயமாக இவரை நாம் வாழ்த்திட வேண்டும்
ஏனெனில், ‘‘பெண்களுக்கு ஆளுமையை அளித்திடத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள கட்சியை இவரல்லவா வழிநடத்தி வருகிறார். பெண்களைப் பழித்துரைத்துப் பேசிட இவரது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் யோசிப்பதே கிடையாது. அவரிடம் தங்களது கோரிக்கைகளை சமர்ப்பிக்க வரும் அங்கன்வாடி ஊழியர்களோ அல்லது சுகாதாரத்துறையின் ஆஷா திட்டப் பணியாளர்களோ மட்டுமல்ல, அரசுத் துறையின் உயரதிகாரியும் கூட இவரது நரம்பில்லா நாக்கின், சொல்லம்பின் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். எஜமானன் அளிக்கும் பாதுகாப்பை இவர் அனுபவித்து வருகிறார். அமைச்சர் ஒருவரின் மகன் ஒரு பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார். எஜமானனின் பாதுகாப்பு வளையத்தினுள் அவர் இருப்பதால், அவரை தொட்டுவிடக் கூடாது.
இன்னொரு அமைச்சரோ, மிகப் பெரிய கல்வி சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார். அங்கு மாணவிகள் துன்புறுத்தப்படுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஒரு சிலர் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளக்கூட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். ஆனால், அமைச்சரைப் பழி சொல்லக்கூடாது. எஜமானர் அவருக்கு துணை நிற்கிறார்.
மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார். என்னுடன் நடிக்கும் ஒவ்வொரு பெண்ணையும் கருவுறச் செய்திடுவது எனக்குப் பிடித்தமானது எனச் சொல்லும் பிரபல திரைப்பட நடிகரும் கூட அவர். ஆனால், அவரை நெருங்கிடக் கூடாது.. ஏனெனில், அவர் எஜமானருக்கு நெருக்கமானவராக இருக்கிறார்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இம்மாநிலத்தின் காவல்துறை எந்த வழிகாட்டு விதிமுறைகளுக்கோ அல்லது நீதிமன்ற உத்தரவுகளுக்கோ கீழ்படிய வேண்டியதில்லை. அவர்கள் பெண்களை முரட்டுத்தனமாகப் பிடித்திழுக்கலாம். ஆண் காவலர்கள் பெண்களைப் பிடித்திழுக்கலாம்.. கைகளோ, கால்களோ, தலைமுடியோ அல்லது புடவையோ.. எவை அவர்களது கைகளில் சிக்குகின்றனவோ அவற்றைக் கொண்டு அவர்கள் பெண்களை இழுத்திடலாம். அவர்களை எதுவும் செய்திட இயலாது. இதுபோன்ற செயல்கள் எல்லாமே அவர்களது எஜமானருக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கின்றன. பெண்கள் நாடாளுமன்றம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திடுங்கள், பெண்கள் தினத்தன்று ‘டிவீஷ்’ மூலம் வாழ்த்திடுங்கள். எல்லா பாவங்களையும் கிருஷ்ணா நதி நீர் கழுவி விடும்.
திரு சந்திரபாபு நாயுடு அவர்களே.. பெண்கள் தினத்தன்று கூட துந்துரு எனுமிடத்தில் ஈவிரக்கமின்றி பெண்களை அடித்ததன் மூலம், பெண்கள் தினம் என்றால் என்ன என்பதனை எங்களுக்கு நினைவுபடுத்தியதற்கு உமக்கு எமது நன்றிகள்…
தலை நகரத்து ஆண் காவலர்களே… உமக்கும் நன்றி!
நன்றி நவிலப்பட வேண்டியவர்களின் பட்டியலில் தில்லி காவல்துறை இடம்பெறாது போய்விடக் கூடாது. தில்லி நகரத்தைப் பெண்களுக்குப் பாதுகாப்பு மிக்க நகரமாக ஆக்கிடுவதில் அவர்களது அனைத்துத் தொழில் திறமைகளுக்கும் நன்றி கூறிட வேண்டும். டிசம்பர் 16ம் தேதியை நினைவில் கொள்ளுங்கள், நிர்பயா எனப் பெயர் சூட்டப்பட்ட ஜோதி சிங்கிற்கு அந்த நாள் எவ்வளவு பாதுகாப்பான தினமாக இருந்தது. அது ஓர் வரலாறு எனில், ஊடகத்தைப் பின் தொடருங்கள். தில்லி நகரத்தின் ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு நகரும் வாகனமும் பெண்களை பாலியல் தொல்லை செய்திடவும், ஏன் பாலியல் பலாத்காரம் செய்திடவும் ஆண்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்கிறது. ஆம், தில்லி காவல்துறையால் நிச்சயமாக உங்களுக்குப் பாதுகாப்பளித்திட இயலும். ரம்ஜாஸ் கல்லூரி சம்பவத்தை கவனித்தீர்களா? முதலில் உங்களைத் தாக்கிடுவதன் மூலம் ஏபிவிபியிடமிருந்து உங்களை அவர்களால் பாதுகாத்திட இயலும். தேசத் தலைநகரின் காவல்துறையைச் சார்ந்தவராக இருப்பதால் பிற மாநிலங்களிலுள்ள காவல்துறையினருக்குச் சளைத்தவர்களாக இவர்கள் இருந்திட இயலாது. எனவே, இங்கும் ஆண் காவலர்கள் பெண்களைப் பிடித்திழுக்கலாம், அடிக்கலாம், அவர்களைத் தொட்டுத் தடவிடலாம். சந்தேகத்திற்கு இடமெதுவுமின்றி, அவர்களும் கூட பெண்களுக்கு டிவீஷ் செய்ய மறந்திடுவதில்லை. தில்லி காவல்துறையில் உள்ள ஆண்களே, உமக்கு நன்றிகள். மகளிர் தின வாழ்த்துக்கள்.
ஓ.. நன்றி சொல்லிட வேண்டியவர்களின் பட்டியல் மிக நீண்டதாக உள்ளது. சமூக வலைத்தளத்திலும், வழக்கமான ஊடகத்திலும் பல முட்டாள்கள் உள்ளனர். அவர்களுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட வேண்டும். அவர்களைப் பற்றித் தனித்தனியாக குறிப்பிடாது போவதற்கு அவர்கள் பொறுத்தருள வேண்டும்.
இறுதியாக, துந்துருவில் தாக்குதலுக்கு ஆளான பெண்கள், தில்லி பல்கலைக்கழகத்தின் பெண்கள் மற்றும் இதர பெண்கள் அனைவருக்கும் நமது நன்றிகள்.
மகளிர் தினம் என்பது எந்தவொரு பொருளையும் வாங்கிடுவதில் இல்லை, ஆனால் வாழ்க்கையை வாழ்ந்திடுவதில் உள்ளது என்பதனை நம்புபவர்கள் இவர்கள் எல்லாம். அது, கண்ணியம், சமத்துவம் மற்றும் மதிப்புடனான ஓர் வாழ்க்கையை வாழ்வதாகும். நூற்றாண்டைக் கடந்து விட்ட பின்னரும் கூட, மகளிர் தினமானது இன்றைய காலகட்டத்திற்கும் கூட பொருத்தமான ஒன்றாக – போராட்ட அனுபவப் படிப்பினைகளுக்காகப் பொருத்தமான ஒன்றாக, வெற்றியை எட்டிடும் வரையிலான போராட்டமே அன்றி இடையில் வேறு எதுவும் கிடையாது என்பதனைச் சுட்டிக் காட்டியதற்காக உங்களுக்கு எமது நன்றிகள். பலப் பல நன்றிகள்..
(பீப்பிள்ஸ் டெமாக்ரசி, மார்ச் 12)
தமிழில் – எம். கிரிஜா

Leave a Reply

You must be logged in to post a comment.