திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் நூறு நாள் வேலை செய்து வருகின் றனர். தினமும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொழிலாளர்கள் ஒன்று கூடிய பின்னர் பணிதள பொறுப்பாளர், தொழிலாளர்களின் வருகையை பதிவு செய்து கொண்டு அவர்களுக்கு வேலையை ஒதுக்கி தருவது வழக்கம்.
செவ்வாயன்று (மார்ச் 14) 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலைக்காக  காத்திருந்தனர். 10 மணிக்கு அங்கு வந்த ஆரணி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுப்பிரமணி யாருக் கும் வேலை இல்லை அனைவரும் வீட்டிற்கு செல்லலாம்  என கூறியுள்ளார்.
இதை கேட்ட தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  காலையில் இருந்து வேலைக்காக காத்திருக்கிறோம், திடீரென வேலை இல்லையென்றால் நாங்கள் என்ன செய்வது என வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் இதை அதிகாரி கண்டு கொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் ஆரணி-வேலூர் சாலையில்  சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது திடீரென வேலை இல்லை என கூறியதால் எங்களது ஒரு நாள் வருமானம் வீணானது. எங்களுக்கு இன்று வேலை வழங்கினால் தான் மறியலை கைவிடுவோம்  என கூறினர். காவல்துறையினர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Leave A Reply