அதிகரிக்கும் மாணவர் தற்கொலை..

கோட்டாவில் உள்ள சிறந்த பயிற்சி நிறுவனங்களில் சேருவதற்கான போட்டி அதிகரித்துக் கொண்டே வரும் அதே வேளையில், அங்கிருக்கும் மாணவர்கள் மத்தியில் தற்கொலை செய்து கொள்ளும் போக்குகளும் அதிகரித்து வருகின்றன. தங்களது குழந்தைகளின் உளச்சார்பு அல்லது திறனைக் கருத்தில் கொள்ளாமல், இந்தப் பயிற்சியை மேற்கொள்ள குழந்தைகளைக் கட்டாயப்படுத்தும் பெற்றோர்கள் உண்மையில் இங்கே நடக்கும் கடுமையான போட்டியின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறார்கள்.

10000 மற்றும் 16000 இடங்களை முறையே வழங்கி வரும் ஐஐடி, என்ஐடி போன்ற நிறுவனங்களில் தங்களது குழந்தைகளைச் சேர்ப்பதற்காக, அவர்களை மிகப் பெரிய மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி, மனத்தளர்ச்சி மற்றும் தற்கொலை எண்ணம் கொண்டவர்களாக பெற்றோர்களே மாற்றி விடுகின்றனர். தங்களுக்கு ஏற்பட்டுள்ள மனஅழுத்தத்தைச் சமாளிக்க முடியாமல், ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு மாணவர் தற்கொலை செய்து கொள்வதாக கோட்டா காவல்துறை பதிவேடு சொல்கிறது.

2010இல் எட்டு, 2011இல் ஆறு தற்கொலைகள் என்றிருந்தது, 2012இல் 11 என்பதாக உயர்ந்தது. 2013ஆம் ஆண்டு ஏப்ரல் வரையிலும், இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என்று நான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை விகிதம் அதிகரித்து வருவதை முக்கியமான விஷயமாக எடுத்துக் கொண்டு அதன் மீது உடனடிக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறும் சம்வேதா ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஆர்.சி சாஹ்னி,

சுயமாக தங்களுக்குள்ளாக போட்டியிடுவதற்கு மாணவர்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, இந்தப் பயிற்சி நிறுவனங்கள் மற்ற மாணவர்களுடன் போட்டியிட வேண்டும் என்று அவர்களை மாற்றி விடுவதாகவே அவர் கருதுகிறார்.

மனஅழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை முடிவினை நோக்கிச் செல்லும் மாணவர்களின் மனநிலை எவ்வாறானதாக இருக்கிறது? என்கிற கேள்வியை எழுப்பிக் கொண்ட டிசூசா அதற்கான விடையையும் காண முயற்சிக்கிறார்.

பெற்றோர்களிடம் இருந்து வருகின்ற கண்ணுக்குத் தெரியாத அழுத்தத்தின் விளைவாகவும், பயிற்சி வகுப்புகள் ஏற்படுத்தியிருக்கும் சவால்களின் விளைவாகவும் சோர்வுடையவர்களாக மகிழ்ச்சியற்று இந்த மாணவர்கள் இருப்பதாக, கோட்டாவில் உள்ள மனநல மருத்துவர் ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

கோவில் சுவர் சொல்லும் சேதி… 

ஒருவரால் உன்னிப்பாக கவனிக்க முடியும் என்றால், மனநல மருத்துவரின் உதவி இல்லாமல், அவராகவே மாணவர்களிடம் இருக்கும் அழுத்தத்தைப் பற்றிய ஒரு முடிவுக்கு வர முடியும். தினந்தோறும் பயிற்சி மையத்திற்கும், விடுதிக்கும் என்று அலைகின்ற அந்த ராட்டினச் சுற்றலில் இருந்து அதை அறிந்து கொள்ள முடியாவிட்டால், நகரில் இருக்கும் ராதாகிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று அங்கே உள்ள சுவர்களை, மாணவர்கள் தங்களது துயரங்களை சுருக்கமாகவும், நீண்டதாகவும் எழுதி வைக்கும் இடமாக இருக்கும் சுவர்களைக் காணும் போது, எவருக்கும் அது தெளிவாகத் தெரிய வரும். “ஐஐடிக்கு தேர்வாவதன் மூலம் என் பெற்றோர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்”, “தயவுசெய்து நல்ல JEE ரேங்க் வாங்குவதற்கு எனக்கு உதவ வேண்டும், என் கடவுளே!” போன்றவை சுவரில் எழுதப்பட்டுள்ள வாசங்களுக்கான சிறந்த எடுத்துக்காட்டானவை.

எஸ்எம்எஸ் வழக்குமொழியில் அந்தச் சுவரில் இருந்த இந்த நீண்ட வாசகம் தன்னை மிகவும் மனதளவில் பாதித்ததாக டிசூசா கூறுகிறார்.  “அன்பான கடவுளே! நான் பிரக்யா. நீங்கள் இப்போதும் எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் கோருகிறேன். ஐஐடி மீது கொண்ட பேராவலால் நான் கோட்டாவிற்கு வந்தேன். ஆனால் இப்போது, என் கடந்த காலத்தை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன். ஐஐடி செல்வதற்கான வழியில் எனக்கு நீங்கள் ஒளி காட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனது பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என் மீது கொண்டுள்ள நம்பிக்கைகள் முடிவில்லாதவையாக இருக்கின்றன.  நான் ஒரு  போதும் அவர்களை ஏமாற்ற முடியாது. தயவுசெய்து என் படிப்பில் கவனம் செலுத்த எனக்கு உதவுங்கள். இதுதான் சரியான நேரம். இப்போது இல்லாவிட்டால் பின் எப்போதும் இல்லை. வாரியத் தேர்வுகளிலும் நான் நன்றாகச் செய்ய வேண்டும். அவரவர்களது நோக்கங்களில் வெற்றி பெற எனக்கும் எனது நண்பர்களுக்கும் வழிகாட்டுங்கள். என் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். எனக்கு அந்நியமானவர்களையும் கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் எனக்கு கொடுத்த அனைத்திற்கும் நன்றி. இல்லாவிடில் நான் தற்போது உள்ளவாறு இருந்திருக்க மாட்டேன். உங்கள் ஆசீர்வாதங்களை வேண்டுகிறேன்’.

இளமை காலத்தை இழக்கும் அவலம்… 

கோயில் சுவரில் இளம் பெண் ஒருவரை ’நான் என் கடந்த காலத்தை இழந்து விட்டதாக உணர்கிறேன்’ என்று கிறுக்கச் செய்தது எது என்ற கேள்வியோடு, கோட்டா மாணவர்களின் தற்கொலைகள் பற்றிய வழக்கமான செய்திகளும் தொடர்ந்து இருந்து வருகின்றன.

அதற்கு முதல் நாள் தான், முக்கியத் (Main) தேர்வில் கிருதி தேர்ச்சியடைந்திருந்ததாக முடிவுகள் வெளியாகி இருந்தன. இருந்தாலும் அவர் பொறியியல் படிக்க விரும்பவில்லை என்பதுதான் உண்மை. ‘நீங்கள் அறிவியலை விரும்பும் சிறு குழந்தையாக என்னை மாற்றி விட்டீர்கள். உங்களை சந்தோஷப்படுத்துவதற்காக நான் அறிவியலை எடுத்துக் கொண்டேன்’ என்று பிரக்யா கோவில் சுவரில் எழுதி வைத்த வரிகளை ஒத்துப் போகின்ற வகையில் கிருதி தனது அம்மாவுக்கு எழுதிய கடிதத்தைத் தொடர்கிறார்.

தனது தங்கையிடமும் இதுபோன்று நடந்து கொள்ள வேண்டாம் என்றும் அவள் தன்னைப் போல இல்லாமல், பல துறைகளில் ஒன்றைத் தெரிந்தெடுக்கும் தகுதியோடு இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ’என்னைக் கொல்ல வேண்டும் என்கிற அளவிற்கு என்னை நான் வெறுக்க ஆரம்பித்து விட்டேன்’ என்று அவரது துயர வாக்குமூலத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரக்யாவும் “என் கடந்த காலத்தை இழந்து” என்று எழுதி வைத்ததன் மூலம் மறைமுகமாக இது போன்று எதையாவது சுட்டிக்காட்டி இருந்தாரா? என்று தெரியவில்லை.

இது போன்ற துயர நிகழ்வுகளால் எச்சரிக்கை அடைந்த நாற்பதுக்கும் மேற்பட்ட கோட்டா பயிற்சி நிறுவனங்கள் தங்களுக்குள்ளாக ஒன்றுசேர்ந்து கூட்டாக, கடந்த செப்டம்பர் மாதம் 24-மணி நேர ஆலோசனை வழங்கும் ஹெல்ப்லைன் ஒன்றினைத் தொடங்கின. இந்த வசதியானது, மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும் மாணவர்களுக்கு உதவி அவர்களது தற்கொலைகளைத் தடுக்க முடியுமா என்பதை இப்போது சொல்ல முடியாது. அவர்களது மன உளைச்சல்களை கோவில் சுவர்களில் தேடிப் பார்ப்பது மிக எளிதாக இருக்கும்.

கோட்டா பிரஷர் குக்கர்… 

இவ்வாறு கோட்டா அனுபவத்தில் இருந்து தான் பெற்ற படிப்பினைகளைப் பகிர்ந்து கொள்ளும் டிசூசா, நல்ல கல்வியைப் பெறுவதற்கான ஒரு சில நிறுவனங்களே நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், அதில் சேருவதற்கான ஆவல் பலரிடமும் இருந்து வருகிறது. இந்த நிலை தொடருமேயானால், இவர்களனைவரின் ஆவல்களையும் நிறைவு செய்ய முடியாது என்பதால், இத்தகைய பயிற்சி வகுப்புகளையும் நம்முடனேயே தொடர்ந்து வைத்திருக்க வேண்டியிருக்கும் என்கிறார். அப்போது கோட்டா போன்ற பிரஷர் குக்கர்களைத் தவிர்க்க முடியாது. தற்கொலைகளும் தொடரத்தான் செய்யும் என்பதையும் வலியுறுத்திச் சொல்கிறார்.

தகவல் : முனைவர் தா.சந்திரகுரு – விருதுநகர்

Leave A Reply

%d bloggers like this: