சேலம்,
ஜே என் யு மாணவர் மர்ம மரணத்திற்கு நீதி விசாரனை கோரி சேலம் நான்கு ரோடு பகுதியில் தலித் மாணவர் முத்துக் கிருஷ்ணின் பெற்றோர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உட்பட பல்வேறு ஜனநாயக அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகரம் சாமிநாதபுரம் மருதநாயகம் தெருவில் ஜீவானந்தம் அலமேலு தம்பதியரின் மகன் முத்து கிருஷ்ணன். இவர் புதுடில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் எம்ஃபில் (நவீன வரலாறு) துறையில் பயின்று வந்தார். இவர் தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தலித் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதாகவும், பாரபட்சம் கட்டப்படுவதாகவும் தனது முகநூலில் முத்துக்கிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் தொடர்ந்து முத்து கிருஷ்ணன் அவமதிக்கப்பட்டு வந்திருக்கிறார் என்பது உறுதியாகிறது. எனவே காவல்துறை முத்துகிருஷ்ணன் மரணத்தில் மர்மம் உள்ளது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், முத்துகிருஷ்ணனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிடடோர் சேலம் நான்கு ரோடு பகுதியில் திங்களன்று இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம்  சேலம் வட்டாச்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது
மாணவனின் மரணத்தில் உள்ள மர்மம் உடைபட வேண்டும். உரிய நீதி விசாரனை வேண்டும். தமிழக அரசே மாணவனின் பெற்றோரிடம் ஒப்படைக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியரிடம் அளித்திட வட்டாச்சியர் மூலம் தரப்பட்டது.  வட்டாச்சியரின் உறுதிமொழி  அடிப்படையில் மறியல் போராட்டம் தற்காலிகமாக திரும்ப பெறப்பட்டது.

மேலும் போராட்டத்தில் பங்கேற்ற வாலிபர் சங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் சாமிநாதபுரத்தில் உள்ள முத்துகிருஷ்ணனின் வீட்டிற்கு சென்று அங்குள்ளவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் உரிய நீதி விசாணை கிட்டும் வரை போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தனர். முத்துகிருஷ்ணனின் மரணம் சேலம் சாமிநாதபுரத்தை  சோகத்தில் ஆழ்தியுள்ளது. மாணவனின் தந்தை ஜீவானந்தம் தில்லி  விரைந்து உள்ளார்.

Leave A Reply