புதுக்கோட்டை, மார்ச் 14-
தங்கள் நிலத்தை அழித்து பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்தும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையே எங்களுக்கு வேண்டும் என வலியுறுத்தியும் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை அடுத்த நல்லாண்டார்கொல்லை விவசாயிகள் நேற்று ஆதிவாசிகள் வேடமணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லாண்டார்கொல்லையில் 27-வது நாளாகவும், வடகாட்டில் 10-வது நாளாகவும் நேற்று போராட்டம் நடைபெற்றது. நல்லாண்டார்கொல்லையில் விவசாயிகள் தங்கள் நிலத்தை பாலைவனமாக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். எங்களுக்கு எங்களின் சாகுபடியுடன் கூடிய இயற்கையோடு வாழும் வாழ்கையே வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக ஆதிவாசிகள்வேடமணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், திட்த்திற்கு எதிராக முழக்கங்களையும், பெண்கள் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர்.
உ.வாசுகி பங்கேற்பு
வடகாட்டில் வழக்கம்போல காய்கறிகளுடனும், மரக்கன்றுகளுடனும் ஊர்வலமாக வந்து செவ்வாயன்றும் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி வடகாட்டிற்கு வந்து போராட்டத்தை ஆதரித்துப் பேசினார். ‘‘பசுமையான இந்த நிலத்தை பாலைவனமாக்கும் மத்திய அரசின் தறவான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக எதிர்க்கும். உங்களோடு எங்கள் கட்சியும், கட்சியின் வெகுஜன அமைப்புகளும் உறுதியான நின்று போராடும்’’ என அவர் தெரிவித்தார்.
கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், துணைத் தலைவர் தமிழரசன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.விக்கி உள்ளிட்டோரும் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.